43 மில்லியன் டாலருக்கு ஏலம் விடப்பட்ட அமெரிக்க அரசியல் சாசனம்
நியூயார்க் ஏல நிறுவனத்தால் 43 மில்லியன் டாலருக்கு ஜார்ஜ் வாஷிங்டன் கையெழுத்திட்ட அமெரிக்க சாசன ஆவணம் ஏலம் விடப்பட்டுள்ளது.
சாமுவேல் பேக்கர் என்கிற புத்தக விற்பனையாளரால் 1744 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த அரிய பொருட்களை விற்கும் ஏல நிறுவனம் சொதேபை துவங்கப்பட்டது. பின்னாளில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இதன் தலைமையகம் உருவாக்கப்பட்டது. கடந்த 250 ஆண்டுகளுக்கும் மேலாக பழம்பொருள் ஏலத்தில் புகழ்பெற்ற இந்த நிறுவனம் தற்போது 40 நாடுகளில் 80க்கும் மேற்பட்ட கிளைகளைப் பரப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை இந்த நிறுவனம் பல்வேறு நாட்டு அரசுகள் மற்றும் தனியாரிடமிருந்து வாங்கி ஏலம் விடுவது வாடிக்கை. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏலத்தில் எடுக்க உலக செல்வந்தர்கள் பலர் ஆர்வம் காட்டுவர்.
இந்நிலையில் சமீபத்தில் 1787ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் 11 ஆவணங்களில் ஓர் ஆவணம் ஏலத்தில் விடப்பட்டது. இந்த அமெரிக்கா அரசியல் சாசனத்தை இயற்றிய ஆவணத்தை வாங்க பலர் போட்டி போட்டனர்.
இந்த ஆவணத்தில் அமெரிக்கா உருவாக்கத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் பிராங்கிளின், ஜேம்ஸ் மேடிசன் உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்காவின் உருவாக்கத்தின்போது கையெழுத்திடப்பட்ட 11 சட்ட ஆவணங்களில் 10 ஆவணங்கள் அமெரிக்க அரசின் வசம் உள்ளன. மீதம் உள்ள ஓர் ஆவணம் சொதேபை நிறுவனத்திடம் விற்கப்பட்டது.
தற்போது சொதேபை நிறுவனம் இந்த ஆவணத்தை ஏலத்தில்விட அறிவிப்பு வெளியிட்டது. இதனை அடுத்து உலக செல்வந்தர்கள் பலர் கிரிப்டோகரன்சி மூலமாக இணையத்தில் இந்த ஏலத்தில் பங்கு கொண்டனர். தற்போது இந்த ஆவணம் 43 மில்லியன் அமெரிக்க டாலருக்கு செல்வந்தர் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது.
இதனை வாங்கிய செல்வந்தரின் பெயர் மற்றும் பிற விவரங்களை வெளியிட சொதேபை நிறுவனம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்திலுள்ள இண்டிபெண்டன்ஸ் ஹால் என்கிற புகழ்பெற்ற அரசு கட்டிடத்தில் இந்த ஆவணம் கையெழுத்திடப்பட்டது. 250 வருடங்களை தாண்டியும் பழுப்பு படிந்த இந்த அமெரிக்க அரசியல் சாசன ஆவணம் பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆவணத்தைக் காண பலர் தற்போது இணையத்தில் ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.