சர்ச்சைக்குரிய திட்டத்தை செயல்படுத்தும் ஐரோப்பிய நாடு
புலம்பெயர் மக்களில் முதல் குழுவை கடற்படைக் கப்பல் ஒன்றில் அல்பேனியாவுக்கு நாடு கடத்தியுள்ளது இத்தாலி அரசாங்கம். இத்தாலியில் உள்ள ஆயிரக்கணக்கான சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடு கடத்தும் சர்ச்சைக்குரிய திட்டத்தை திங்கட்கிழமை இத்தாலி அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கம் கைவிட்ட சர்ச்சைக்குரிய திட்டத்தை இத்தாலியின் ஜார்ஜியா மெலோனியின் அரசாங்கம் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. |
அல்பேனியாவில் இரண்டு முகாம்களை இத்தாலி அரசாங்கம் உருவாக்கியுள்ளது. சட்டவிரோத புலம்பெயர் மக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய நாடு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெறாத நாடு ஒன்றிற்கு நாடு கடத்தும் திட்டத்தை முதல்முறையாக செயல்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியில் எதிர்காலம் கருதி நுழைந்த 10 வங்கதேச நாட்டவர்களும் 6 எகிப்தியர்களும் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஞாயிறன்று கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட 16 புலம்பெயர் மக்களை தற்போது இத்தாலி அரசாங்கம் அல்பேனியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. இத்தாலியால் பாதுகாப்பான நாடு என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து புலம்பெயரும் மக்களை மட்டுமே அல்பேனியாவுக்கு அனுப்ப இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 21 நாடுகளை அவ்வாறு இத்தாலி அடையாளப்படுத்தியுள்ளது. இவ்வாறு பாதுகாப்பான நாடு என இத்தாலியால் அடையாளப்படுத்தப்பட்ட பங்களாதேஷ், எகிப்து, ஐவரி கோஸ்ட் மற்றும் துனிசியா ஆகிய 4 நாடுகளில் இருந்து மட்டும் கடந்த ஆண்டு 56,588 பேர்கள் இத்தாலியில் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். இந்த நிலையில், புலம்பெயர் மக்களுடன் புறப்பட்ட கடற்படைக் கப்பலானது அல்பேனியாவில் புதன்கிழமை பகல் சென்று சேரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அல்பேனியாவுடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் 36,000 சட்டவிரோத புலம்பெயர் மக்களை இத்தாலி அனுப்பி வைக்கும். பாதுகாப்பான நாடு என இத்தாலி அடையாளப்படுத்தப்பட்டுள்ள அந்த 21 நாடுகளின் இருந்து மக்கள் இத்தாலிக்குள் நுழைந்தால், அவர்கள் அல்பேனியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள். |