தமிழக மீனவர்களை விடுவிக்க ! மோடியிடம் விஜய் கோரிக்கை.

28.05.2026 08:42:31

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது.

இதன்பின், சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து இருவரும் தமிழ்நாடு மற்றும் தேசிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது தமிழக மீனவர் விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்டிய முக்கிய விபரங்கள்:

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 12 கைது சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த 58 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களின் 266 மீன்பிடிப் படகுகளும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, இலங்கை சிறையிலுள்ள மீனவர்களையும் அவர்களது வாழ்வாதாரமான படகுகளையும் தாமதமின்றி விடுவிப்பதற்கு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என இச்சந்திப்பில் தமிழக முதலமைச்சர் விஜய் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களால் எல்லையோர மாவட்ட மீனவக் குடும்பங்கள் கடுமையான அச்சத்திலும், வாழ்வாதார இழப்பிலும் தவித்து வரும் நிலையில்,  டெல்லி சென்ற முதலமைச்சர் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார்.