பாகிஸ்தானிடம் உதவி கோரும் அமெரிக்கா

05.09.2021 11:00:00

பாகிஸ்தான் தொடர்ந்து அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், தாலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலமாக இந்த பயங்கரவாத அமைப்புகளை மறைமுகமாக ஆதரிக்கிறது.

இதனை அடுத்து அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இதுதொடர்பாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போர்தொடுக்க பாகிஸ்தானை அமெரிக்க ஜோ பைடன் அரசு வலியுறுத்தியுள்ளதாக சில சட்ட ஆவணங்கள் கூறுகின்றன. இந்த ஆவணங்கள் தற்போது எதிர்பாரா வண்ணம் வெளியே கசிந்துள்ளன.

இதுதொடர்பாக பொலிடிகோ இதழில் வெளியாகிய ஓர் செய்தியை டான் இதழ் வெளியிட்டது. வாஷிங்டன், இஸ்லாமாபாத் ஆகிய இரு தரப்புக்கும் இடையே சட்டபூர்வமாக தாலிபான்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதை இந்த செய்தி உறுதி செய்துள்ளது.


ஐஎஸ்ஐஎஸ்-கே, அல்கொய்தா, தாலிபான் ஆகிய பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்து போராட அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உதவ முன்வரவேண்டும் என்று பைடன் அரசு இம்ரான் கான் அரசுக்கு இதன் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா, பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் பாகிஸ்தானின் நட்புறவை பெற ஜோ பைடன் அரசு இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. மேலும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க இம்ரான் கான் அரசு மறைமுகமாக உதவி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஆப்கானிஸ்தான் குடிமக்களே வெளிப்படையாக முன்னதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக அமெரிக்காவின் அரசியல் விவகார பிரிவு மாகாண செயலாளர் விக்டோரியா நூலாண்ட் எடுத்த நடவடிக்கை தற்போது வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் குடிமக்களை பத்திரமாக அமெரிக்காவுக்கு கொண்டுவந்து சேர்க்க உதவிய நாடுகள் பட்டியலில் இவர் பாகிஸ்தானையும் சேர்த்துள்ளார். இந்த நாடுகளுக்கு அமெரிக்கா எப்போதும் கடமைப்பட்டிருப்பதாக விக்டோரியா தனது அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும் தாலிபான்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. இதனை வைத்து பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்து போரிட அமெரிக்கா திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.