மீண்டும் தமிழுக்கு வரும் சாய் பல்லவி

31.07.2021 15:14:21

பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்து பிசியான நடிகையாக மாறினார். அதேநேரம் தமிழில் மாரி 2 படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் ஜோடி சேர்ந்தார். படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் தமிழில் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்ற சாய் பல்லவி, பிசியான நடிகையாக மாறிவிட்டார். அவர் நடிப்பில் ராணாவுடன் 'விராட பருவம்', நாக சைத்தன்யாவுடன் 'லவ் ஸ்டோரி' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. தற்போது பவன் கல்யாணுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர நிறைய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சாய் பல்லவி நடிப்புக்கு தெலுங்கு சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியிலும் நடிக்க இருப்பதாக கூறுப்படுகிறது.

இந்நிலையில் தமிழில் புதிய படம் ஒன்றில் சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை நிவின் பாலியை வைத்து 'ரிச்சி' படத்தை இயக்கிய கெளதம் ராமச்சந்திரன் இயக்கவுள்ளாராம். விரைவில் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.