REBEL திரைப்படத்தின் டிரைலரை பார்த்து வியந்த சீமான்

13.03.2024 07:13:00

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ்குமார் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர்  நடிப்பில், இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரிபெல். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

 

இப்படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கினர். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

இந்த டிரைலர் இணையதலத்தில் வைரலாகி வரும் நிலையில், தமிழகம்  கேரளம் எல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் டிரைலரை பார்வையிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 
''ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களின் நடிப்பில் வெளியாகவிருக்கும் #REBEL (ரெபெல்) திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி பார்த்து வியந்தேன்.

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு தமிழ் மக்களின் உரிமை பேசும் திரைப்படம் ஒன்று வெளியாகவிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

முன்னோட்ட காணொளியில் இடம்பெற்றுள்ள விறுவிறுப்பான காட்சிகளும், அழுத்தமான வசனங்களும் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதோடு, திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையையும் அளிக்கிறது.

தம்பி ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் படக்குழுவினருக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!''என்று தெரிவித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 22 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.