முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த ஜோதிமணி எம்பி.

23.08.2026 12:07:20

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தமிழ்நாடு அரசு தனி அலுவலகங்கள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் தொடர்ந்து சென்று மக்களை சந்திக்க வேண்டிய நிலை இருப்பதாக கூறினார்.

 

தொகுதிகள் பரந்து விரிந்து இருப்பதால், மக்கள் சந்திப்பு மற்றும் அலுவல் பணிகளுக்காக எம்.பி.க்கள் அதிக அளவில் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றும் ஜோதிமணி தெரிவித்தார். தனது தொகுதி நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியிருப்பதால், பயணத்திற்கான எரிபொருள் செலவும் அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 

மேலும், மக்கள் பிரதிநிதிகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டுமெனில், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுப்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார். குறிப்பாக, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அரசு சார்பில் தனி அலுவலக வசதி இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.