அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு

02.03.2023 16:43:41

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தலைமையிலான அமா்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அதானி - ஹிண்டென்பர்க் விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டுமுன்னாள் நீதிபதி ஏ.எம். சப்ரே தலைமையில் நிபுணர் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழு தேவை என்பதை உணர்கிறோம். முன்னாள் நீதிபதி ஏம்.எம். சப்ரே தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பிப்பதாகவும், இந்த குழுவில், முன்னாள் நீதிபதிகள் ஓ.பி. பட், ஜே.பி. தேவ்தத், கேவி காமத், நந்தன் நீலகேணி ஆகியோர் சிறப்பு நிபுணர் குழுவில் இடம்பெறுவார்கள். பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்பது தெரிய வந்துள்ளது. சிறப்பு நிபுணர் குழு, இரண்டு மாதத்தில் விசாரணையை முடித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் . விசாரணை நடத்த அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிபுணர் குழுவுக்கு மத்திய அரசு, நிதிசார்ந்த சட்ட அமைப்புகள், செபி நிர்வாகி உள்ளிட்டோர் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.