ஹைப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் இந்தியா!

20.06.2025 14:34:14

இந்தியா தனது இராணுவ சக்தியை மேம்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்ட ஒரு புதிய ஹைப்பர்சோனிக்  ஏவுகணையை உருவாக்கி வருகின்றது.

 

இந்த ஹைப்பர்சோனிக்  ஏவுகணைக்கு ET-LDHCM என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 11,000 கிலோமீற்றர் வேகத்தில் பறந்து, சுமார் 1,500 கிமீ வரம்புக்குள் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையானது” ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் மற்றும் ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  எதிரி ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை தவிர்க்கும் திறன் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணையை தெற்கு பஞ்சாப்,டெல்லி போன்ற இடங்களில் இருந்து இந்திய விமானப்படையின் சுகோய் மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் மூலம் ஏவ முடியும் எனவும்,  இதனால் இந்தியா எதிரி எல்லைகளை தாண்டாமலே  தாக்குதல் நடத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஏவுகணை DRDO (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) தலைமையில், ப்ராஜெக்ட் விஷ்ணு என்ற பெயரில், ‘தன்னம்பிக்கை இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. எதிரி நாடுகளின் எச்சரிக்கையை அதிகரிக்கும் வகையில், இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் நிபுணர்கள் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.