''மேகதாது அணை விவகாரம்.
|
''மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியின் உரிமை நிலைநாட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமி்தஷா முன்னிலையில் உறுதியளித்துள்ளேன். மேகதாதுவில் கட்டப்படும் அணையில் இருந்து 5 டிஎம்சி தண்ணீர் மட்டும் பெங்களூர் குடிநீருக்காக எடுக்கப்படும். மீதமுள்ள அனைத்து தண்ணீரும் தமிழகத்துக்கு தான் வழங்குவோம்'' என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று தென்மாநிலங்களின் முதல்வர் மாநாடு நடந்தது.
|
|
இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்வர் விடி சதீசன், தெலுங்கானா துணை மல்லு பாட்டி விக்ரமார்கா பங்கேற்றனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்காத நிலையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்றார். இந்த மாநாட்டில் தொகுதி மறுவரையறை, மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. கர்நாடகா - தமிழ்நாடு இடையே காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் மோதல் உள்ளது. இதனால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. இந்த மாநாட்டிற்கு பிறகு டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ''மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியின் உரிமை நிலைநாட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் உறுதியளித்துள்ளேன். மேகதாதுவில் அணையில் இருந்து எங்களுக்கு பெங்களூர் குடிநீர் தேவைக்காக 5 டிஎம்சி தண்ணீர் மட்டும் போதும். மீதம் உள்ள அனைத்து தண்ணீரும் தமிழகத்துக்கு திறந்து விடப்படும். 5 டிஎம்சிக்கு மேல் ஒரு துளி தண்ணீரை கூட நாங்கள் எடுக்க மாட்டோம்'' என்று கூறினார். மேகதாது அணை என்பது கர்நாடகா - தமிழக எல்லையில் கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் கட்டப்பட உள்ளது. இந்த இடம் தமிழக எல்லையில் இருந்து 4-5 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. இங்கு அணையானது 99 மீட்டர் உயரத்தில் 736 மீட்டர் நீளத்தில் கட்டப்பட உள்ளது. சுமார் 67.16 டிஎம்சி தண்ணீரை தேக்கும் அளவுக்கு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லையில் அணை கட்டுவதால் நமக்கு காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காது என்பதால் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் தான் மேகதாது அணையில் இருந்து 5 டிஎம்சி தண்ணீரை மட்டும் பெங்களூர் குடிநீருக்கு எடுத்து கொண்டு மற்ற அனைத்தையும் தமிழகத்துக்கு திறந்து விடுவோம் என்று டிகே சிவக்குமார் கூறியுள்ளார். மேலும் இந்த மேகதாது அணையை பயன்படுத்தி கர்நாடகா தண்ணீர் சேமிப்பை தாண்டி 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக தென்மாநில முதல்வர்களின் மாநாட்டில் டிகே சிவக்குமார் பேசும்போது, ''மேகதாதுவில் அணை எங்களுக்காக கட்டப்படவில்லை. உங்களுக்காக (தமிழ்நாடு, புதுச்சேரி) தான் கட்டுகிறோம். தண்ணீர் என்பது மாநிலங்களை ஒன்றிணைக்க வேண்டும். பிரிக்க கூடாது. தண்ணீர் பங்கீடு என்பதை தாண்டி தண்ணீருக்கான ஒத்துழைப்பு என்பதை நோக்கி செல்லும் நேரம் வந்துவிட்டது. நமது ஆறுகள் அரசியல் எல்லைகளை அஙகீகரிப்பது இல்லை. காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணாறு, பாலாறு உள்ளிட்டவை தென்னிந்தியாவில் உயிர்நாடிகளாக உள்ளன. கர்நாடகா எப்போதும் தனது அண்டை மாநிலங்களின் உரிமைகளை மதித்து வருந்துள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி எங்களுக்குரிய சட்டப்பூர்வ பங்கு மற்றும் விவசாயிகளுக்கு நீர் கொண்டு செல்லும் திட்டங்கள் சார்ந்த விஷயங்களில் எங்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும். இதை தான் நாங்கள் முன்வைக்கிறோம்'' என்று பேசியிருந்தார். |