தமிழகத்தில் தலைமறைவாகி இருந்த இலங்கை தம்பதி கைது

03.09.2021 14:23:42

தமிழகம் – தூத்துக்குடி அருகே தலைமறைவாகி இருந்த இலங்கை தம்பதியை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் இருந்து படகு மூலம் தூத்துக்குடிக்கு சென்ற குறித்த தம்பதி, தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு பகுதியில் தங்கி இருப்பதாக மதுரையில் உள்ள கியூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மதுரை கியூ பிரிவு காவல்துறையினர் வைப்பாறு பகுதியில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியை கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அவர்கள் இருவரும் இலங்கையைச் சேர்ந்த பலருடன் படகு மூலம் கடந்த பெப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு பயணித்திருந்ததுடன், அவர்களுடன் சென்றவர்கள் அங்கிருந்து கனடா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், மதுரையில் கைதுசெய்யப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், அவர்கள் இருவரிடமும் கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.