அடுத்தடுத்து வெளியாகும் அதிமுக ஆட்சியின் ஊழல்கள்

22.08.2021 14:54:57

அதிமுக ஆட்சியில் சென்னை புளியந்தோப்பு கே. பி பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதேபோல சென்னை ராமாபுரத்திலும், பெரம்பலூரிலும் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2. 38 லட்சம் டன் நிலக்கரி மாயமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படி கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

இந்த விவகாரங்கள் நாளை சட்டப்பேரவை கூட்டத்தில் புயலை கிளப்பும் என தெரிகிறது. மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த மேலும் பல முறைகேடுகள் அம்பலமாகுமா என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 13ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 

மறுநாள் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வமும் தாக்கல் செய்தனர்.

இவை இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டன. கடும் நிதி நெருக்கடியிலும் புதிதாக வரிகள் விதிக்காதது மற்றும் முதல் முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது ஆகியவை பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 16ம் தேதி முதல் நடைபெறுகிறது.

அதிமுக மற்றும் பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் கேள்விகளை எழுப்பி பேசினர். இதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.