எஸ்.எம்.மரிக்கார் சாடல்
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என்று நாம் நம்பவில்லை. கெஹெலிய ரம்புக்வெல்லவைப் போன்று, இவரையும் மொட்டு கட்சி காப்பாற்றிவிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொலன்னாவையில் சனிக்கிழமை (16) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு, புதனன்று வாக்கெடுப்பு நடத்தப்படும். எவ்வாறிருப்பினும் பொதுஜன பெரமுனவிலுள்ளவர்கள் மீது எமக்கு துளியளவும் நம்பிக்கையில்லை.
இன்று தரக்குறைவான மருந்தினை கொள்வனவு செய்த கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நாம் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்த போது, பொதுஜன பெரமுனவில் அனைவரும் சேர்ந்து அவரைக் காப்பாற்றினர். ஆனால் நீதித்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
அதே போன்று இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் மோசமான சபாநாயகரான இவருக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவினர் வாக்களித்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றார்.