முதல்வர் விஜய் நாளை ஆந்திரா பயணம்!

12.10.2026 14:50:59

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு நாளை (13.10.2026) பயணம் மேற்கொள்ள உள்ளர். இந்தப் பயணத்தின்போது ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேச உள்ளார். இந்தச் சந்திப்பின்போது, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக இரு மாநில முதலமைச்சர்களும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய உரிய நீரின் அளவு கிடைக்கவில்லை எனத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நதிநீர் பங்கீடு தொடர்பான இந்த விவகாரம் குறித்து இரு மாநில முதலமைச்சர்களும் நாளை ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, விஜயவாடாவில் நடைபெற உள்ள 'விஜயவாடா உற்சவ் 2.0' நிகழ்ச்சியிலும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்கான அழைப்பை வழங்குவதற்காக, கடந்த வாரம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து அழைப்பிதழை வழங்கியிருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் விஜயவாடாவிற்குப் புறப்பட்டுச் செல்கிறார்.