சொந்த கட்சியை விட அடுத்த கட்சிகளின் ஆதரவு அதிகமா?

15.10.2026 08:22:55

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு  எதிராக ராகுல் காந்தி நடத்தி வரும் போராட்டங்கள், காங்கிரஸ் கட்சியின் எல்லைகளை தாண்டி பெரிய அளவில் உருவெடுத்துள்ளன. 

பெண் தலைவர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சி.ஜே.பி  போன்ற இளைஞர் சார்ந்த அமைப்புகள் இப்போராட்டத்தில் அதிக அளவில் பங்கேற்று வருகின்றன. குறிப்பாக, இடதுசாரி மாணவர் அமைப்பான ஏ.ஐ.எஸ்.ஏ  தலைவர் நேஹா போராவிற்கு ராகுல் காந்தி அளிக்கும் முக்கியத்துவம், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

காங்கிரஸின் சொந்த அமைப்புகளான என்.எஸ்.யு.ஐ  மற்றும் இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றை விட, வெளிப்புற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முன்வரிசையில் நிற்பது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. டெல்லி பல்கலைக்கழக தேர்தலில் என்.எஸ்.யு.ஐ சந்தித்த தோல்விக்கு பிறகு, யோகேந்திர யாதவ், தீபங்கர் பட்டாச்சார்யா போன்ற வெளிப்புற சிந்தனையாளர்களுக்கு ராகுல் முக்கியத்துவம் அளிப்பது அதிகரித்துள்ளது.

இப்போராட்டத்தை சிவபெருமானின் தாண்டவத்துடனும் "சிவஜியின் பாராத்" ஊர்வலத்துடனும் ராகுல் காந்தி ஒப்பிட்டுள்ளார். கட்சி வரம்புகளை கடந்து அனைவரும் இணையக்கூடிய ஒரு போராட்டமாக இதை மாற்ற அவர் விரும்பினாலும், இந்த இயக்கம் காங்கிரஸின் சொந்த அமைப்புகளின் பலத்தை குறைக்குமா என்ற அச்சம் நிலவுகிறது.