முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பிக்கள் கூட்டம்.

07.08.2026 08:04:00

மத்திய அரசு மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் அரசியல் மற்றும் பிரதிநிதித்துவ தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழக எம்.பி.க்களின் கலந்தாய்வு கூட்டத்திற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். 

சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு, புது தில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லம் மூலமாக அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் போதிய ஆதரவு இல்லாததால் மக்களவையில் தோல்வியடைந்த இந்த மசோதாவை, தற்போதைய மழைக்காலக் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட இண்டி கூட்டணிக் கட்சிகளின் தமிழக எம்.பி.க்கள் ஆலோசனை நடத்தினர். எனினும், மசோதாவின் நகல் கிடைக்காததால் இந்த ஆலோசனையில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

முன்னதாக காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் கூட்டியுள்ள இக்கூட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மேலோங்கியுள்ளது. மாநிலத்தின் முக்கிய உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது