
கடும் அழுத்தத்தில் அரசு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட விவாதங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பை இலங்கை தற்போது பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) வோல்கர் டர்க் நேற்று தெரிவித்திருந்தார்.
மனித உரிமை நிலவரங்கள்
இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மற்றும் புதிதாக முன்வைக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பில் ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் சபையில் கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் சபையில் உரையாற்றவுள்ளனர் என்று அறிய முடிகின்றது.