தனித்தும் கூட்டாகவும் களமிறங்கும் ஐக்கிய மக்கள் சக்தி!

09.03.2025 11:32:54

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் தனித்தும் சில தொகுதிகளில் கூட்டணியாக தொலைபேசி சின்னத்திலும் களமிறங்கத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய கூட்டணியின் பிரதான பங்காளி கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி, இரத்தினபுரி, பதுளை போன்ற மாவட்டங்களில் தனித்து போட்டியிடவுள்ளது. நுவரெலியாவில் கூட்டணியாக போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு மற்றும் கிழக்கில் தனித்து களமிறங்கவுள்ளது. எவ்வாறிருப்பினும் கொழும்பில் கூட்டணியாக தொலைபேசி சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ள போதிலும், மேயர் வேட்பாளர் குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. அடுத்த வாரம் இது குறித்து தீர்மானிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வெள்ளிக்கிழமை (07) எத்துல்கோட்டையிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர் பழனி திகாம்பரம் மற்றும் முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்காக முற்போக்கான யதார்த்தமான சேவைகளை நிறைவேற்றுவோம்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் மாத்திரமின்றி சகல தரப்பினருடனும் நாம் இணைந்து செயற்படுகின்றோம். கட்சி ரீதியாக அன்றி கொள்கை ரீதியாக எம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் அனைவருடனும் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம் என்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய சில மாவட்டங்களில் தனித்து களமிறங்கத் தீர்மானித்துள்ளோம். கண்டி, இரத்தினபுரி, பதுளை போன்ற மாவட்டங்களில் தனித்து போட்டியிடவுள்ளோம்.

நுவரெலியா மாவட்டத்தில் இணைந்து களமிறங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் சகல தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதற்கும் நாம் தயாராகவுள்ளோம். தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் இணைந்து பயணிக்க முடியும். அதில் எவ்வித சிக்கலும் இல்லை.

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றாததால் மக்கள் அதிருப்தியிலிருக்கின்றனர். அரசாங்கம் பாரிய பொய்களைக் கூறியே ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சியை பொறுப்பேற்க முன்னர் பெற்றோலை 100 ரூபாவுக்கு வழங்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதுவரை அவ்வாறானதொரு நிலைமை உருவாகவில்லை. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இம்முறை தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று நம்புகின்றோம்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாட் சம்பளம் என்பது பொய் கதையாகும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கொட்டகலைக்கு வருகை தந்து இதனையே கூறினார். ஜனாதிபதியும் அதனையே கூறினார். யார் எதைக் கூறினாலும் தாம் 1700 ரூபா நாட் சம்பளத்தை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவோம் என கம்பனிகள் கூறினால் மாத்திரமே அதனை நம்ப முடியும். பெருந்தோட்ட துறையில் மாற்றங்களை ஏற்படுத்தாத வரை சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய தேசிய கட்சியையும் ஒன்றிணைப்பதற்கு நாம் முயற்சித்தோம். இரு கட்சிகளினதும் தலைவர்கள் ஒன்றிணையாவிட்டால் நாம் என்ன செய்வது? எதிர்காலத்திலாவது இவ்விரு கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கின்றோம். தலைவர்கள் இருவருமே இது குறித்து சிந்திக்க வேண்டும். ஆனால் இணைவதற்கு இவர்கள் இருவருமே விரும்பவில்லை என்றே தோன்றுகிறது என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போது சிலர் யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும், சிலர் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆனால் தற்போது நாம் சகல தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சக்தியாக தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளோம். எவ்வாறிருப்பினும் கீழ் மட்டத்தில் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு முயற்சிக்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சியை மாத்திரமின்றி கடந்த காலங்களில் எம்முடன் செயற்படாத தரப்பினரையும் இணைத்துக் கொண்டு செயற்படத் தீர்மானித்துள்ளோம் என்றார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவிக்கையில், உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சில தொகுதிகளில் தனித்தும் சில தொகுதிகளில் கூட்டணியூடாகவும் போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். கடந்த தேர்தல்களில் கூட்டணியாக களமிறங்கிய தொகுதிகளில் இம்முறையும் அவ்வாறே களமிறங்குவதற்கான இணக்கப்பாடு தொடர்பிலேயே இன்றை கலந்துரையாடல் இடம்பெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடுவதற்கு முயற்சிக்கின்றோம். கடந்த தேர்தல்களில் முற்றிலும் வேறுபட்ட சூழலே காணப்பட்டது. எனினும் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 4 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அந்த சூழல் மாற்றமடைந்துள்ளது. முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர் என்றார்.