ஜனாதிபதியாக இந்த 7 விடயங்களையும் செய்து முடிப்பேன்: ட்ரம்ப் உறுதி!

07.11.2024 09:03:00

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப், புலம் பெயர்தல், பொருளாதாரம், உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்களில் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அவரது வெற்றி உரையில், எளிமையான முறையில் ஆட்சி நடத்த இருப்பதாகவும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறோம் என்றார். அதில் முதலாவதாக ஆவணங்கள் இல்லாத புலம்பெயர் மக்கள் கொத்தாக நாடுகடத்தப்படுவார்கள்.

  

முதல் முறை ஜனாதிபதியாக இருந்தபோது தொடங்கப்பட்ட மெக்ஸிகோவின் எல்லையில் சுவர் கட்டுவதை முடிக்க உறுதியளித்தார். ஆனால் புலம்பெயர் மக்களை நாடுகடத்துவது என்பது மிகப் பெரிய சட்ட சிக்கலையும், போக்குவரத்து சவால்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன் பொருளாதார வளர்ச்சி என்பது தாமதமாகும்.

இரண்டாவதாக பொருளாதாரம், வரி மற்றும் கட்டணம் விதிப்பு. ஏற்கனவே விலைவாசி உயர்வை முடிவுக்கு கொண்டுவர ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். அத்துடன் பெருமளவு வரி குறைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக பற்றாக்குறையை குறைக்க, பெரும்பாலான வெளிநாட்டு பொருட்களுக்கு குறைந்தபட்சம் 10 சதவிகிதம் புதிய வரிகளை அவர் முன்மொழிந்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 60 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவதாக காலநிலை விதிமுறைகளை ஒழித்தல். முன்னர் ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்த போதே நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை அவர் திரும்பப் பெற்றார். மட்டுமின்றி, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய முதல் நாடாகவும் அமெரிக்கா மாறியது.

4வதாக உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவாக பல பில்லியன் டொலர் தொகையை அமெரிக்கா செலவழிப்பது குறித்து ட்ரம்ப் விமர்சித்துள்ளார். வெறும் 24 மணி நேரத்தில் ஒப்பந்தங்களின் அடிப்படையில் போரை முடிவுக்கு கொண்டுவர தம்மால் முடியும் என்றும் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.

5வதாக கருக்கலைப்புக்கு தடை இல்லை என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி தேசிய கருக்கலைப்பு தடை சட்டத்தில் தாம் கையெழுத்திடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

6வதாக, கலவரத்தில் ஈடுபட்டோருக்கு பொதுமன்னிப்பு. 2021 ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்ட குறிப்பிட்ட சில குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த கலவரத்தில் பலர் மரணமடைந்தனர். அந்த வன்முறை சம்பவங்களை தூண்டியவர் என ட்ரம்ப் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 7வதாக சிறப்பு சட்டத்தரணி ஜாக் ஸ்மிது பதவி பறிப்பது. தன் மீதான குற்றவியல் வழக்குகளை முன்னெடுக்கும் ஜாக் ஸ்மித் பதவி பறிக்கப்படும் என்றே ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார்.