புர்கினா பாசோவில் தாக்குதல் வீரர்கள் உட்பட 47 பேர் பலி
புர்கினா பாசோவில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ராணுவ வீரர்கள் உட்பட 47 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில், சமீப காலமாக, பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. ராணுவத்தினர் தேவையான ஆயுதங்கள் மற்றும் போதிய பயிற்சிகள் இல்லாமல் இருப்பதால், புர்கினா பாசோ அரசு, பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாமல் தவித்து வருகிறது. இதற்கிடையே, பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த மாதம், நாட்டில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், நாட்டின் வட திசையில் அமைந்துள்ள சாகேல் பிராந்தியத்தில், ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 17 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுடன், அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் 30 பேரும், உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், அல்குவைதா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் தான், இந்த தாக்குதல்களை நடத்தி இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.