ஆட்சியில் பங்கா?.

12.02.2026 12:59:21

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்திற்கு கூட்டணி ஆட்சி ஒத்துவராது எனக் கூறியது 100 சதவீதம் சரியானது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பாஜக - காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ பலமாகச் சிரித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “நடைபெற இருக்கின்ற சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுக என்ன முடிவு எடுத்ததோ, திராவிட இயக்கத்தை பாதுகாக்க, பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் நுழைவதை வேரோடு, வேரோடு மண்ணோடு வீழ்த்துவதற்கு பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் சமூக நீதியை வளர்த்த தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவ அனுமதிக்க கூடாது என்பதற்காகத்தான் திமுக உடன் மதிமுக கூட்டணி அமைத்தது.

கூட்டணியில் உறுதி கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகின்ற முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக, இந்த தேர்தலுக்கு பின்னரும் அவரே கொற்றம் அமைப்பார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை. ஆனால் மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அவ்விதமான எவ்வித நிபந்தனையும் ஒரு சொல் கூட சொல்லியது கிடையாது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என முதலமைச்சர் கூறியது நூற்றுக்கு 100 சதவீதம் சரி” என்றார்.

அப்படியே வழிமொழிகிறேன் மேலும் பேசிய அவர், “இந்திய இறையாண்மையை அடகு வைத்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமையாக ஆகிவிட்டார், இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி. இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தின் மக்களவையில் பதிவு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டை நான் அப்படியே வழிமொழிகிறேன். இந்துத்துவ சக்திகளின் கோர தாண்டவம், 'வந்தே மாதரம்' பாடலை அரசியல் நிர்ணய சபையில், சில வரிகள் இங்கே இருக்கக்க கூடிய சிறுபான்மை மக்களின் நெஞ்சத்தை புண்ணாக்க கூடியது என்பதற்காக அதை அவர்கள் நீக்கினார்கள்.

இப்போது மொத்தமாக இருக்கக் கூடிய, பங்கீம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலை முழுமையாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் அதை பாடிவிட்டுதான், தேசிய கீதம் பாட வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு அக்கிரமமான சட்ட மசோதா ஒன்று இந்த பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது. எச்சரிக்கை மணி இது எச்சரிக்கை மணி. அடுத்து டெல்லிக்கு இந்திர பிரசாத் என்று வேறு பெயர் வைக்க வேண்டும், தலைநகரை வாரணாசிக்கு மாற்ற வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சக்திகளின் திட்டம் மற்றும் உள்நோக்கம் இருக்கிறது. படிப்படியாக திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் முயற்சிக்கிறார்கள். எல்லாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பல தேசிய இனங்களை உள்ளடக்கியதுதான் இந்தியா. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சீக்கியம் என்பது உள்பட பல தேசிய இனங்களை கொண்டதுதான் இந்தியா. ஆங்கிலேயர்களின் லத்தியும், துப்பாக்கியும் தான் இதை ஒரு நாடு என்ற நிலைக்கு கொண்டு வந்தது. எதிர்காலத்தில் இந்த ஒருமைப்பாடு உடைந்து நொறுங்குவதற்கு என்ன ஆபத்துக்களை ஏற்படுத்த முடியுமோ, அதை திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதன் அடையாளம்தான் இந்த வந்தே மாதரம் பாடல் சட்ட மசோதாவை அரங்கேற்றி உள்ளனர். இதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

திமுகவுக்கு பக்க அரண் எங்கள் சக்தியை பயன்படுத்தி, நானும், எங்களுடைய இயக்கமும் இப்படிப்பட்ட முயற்சிகளை முறியடிப்பதற்கு எல்லா வகையிலும் போராடுவோம். எந்த மன்றத்திலும் வைகோவின் குரல் இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான முழக்கமாகத்தான் இருக்கும் என்பதையும், வரும் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தொடரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதன் வெற்றிக்கு எப்படி நான் ஒரு காலத்தில் முழு மூச்சாக பாடுபட்டேனோ, இப்போதும் அதே உணர்வுடன் இருப்பதால் தான் திருச்சியில் இருந்து மதுரை வரை 180 கி.மீ, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களை சந்தித்து பயணித்தேன்.

மதிமுக சேர்ந்துவிடவில்லை, அது முடங்காது, அது அடிப்பட்ட வேங்கை சீறி எழுவது போல நிமிர்ந்து எழுந்து வீரநடை போடும். என் தோழர்களும் அப்படித்தான் நிற்கிறார்கள். எங்களுடைய இயக்கம் திமுகவுக்கு ஈட்டி முனையாக, உறுதுணையாக, பக்க அரணாக செயல்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். பலமாகச் சிரித்த வைகோ அதிமுக கூட்டணியில் பாஜகவும் - திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ பலமாகச் சிரித்துவிட்டு பதில் சொன்ன வைகோ, “தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது இந்த கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது.. ஏற்கப்படாது” என்று தெரிவித்தார். தனி மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால் என்ன ஆகும் என்ற கேள்விக்கு, “கற்பனைவாதங்களுக்கு எல்லாம் இந்த வைகோ பதில் சொல்ல மாட்டான்” எனப் பதிலளித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.