பல மாவட்டங்களில் வேட்பு மனு சிக்கல்

22.01.2023 00:59:58

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பல மாவட்டங்களுக்கு வழங்கிய சிக்கல்கள் இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஹோமாகம மற்றும் சீதாவக்க உள்ளூராட்சி சபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மாத்திரம் எவ்வித பிரச்சினையுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கொழும்பு மாவட்ட பிரதி தெரிவத்தாட்சி அதிகாரி மாபா பண்டார தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து இன்று மாவட்ட அளவிலான வேட்புமனுக்களின் ஏற்பு மற்றும் நிராகரிப்புகள் அறிவிக்கப்பட்டன.

கொழும்பு மாநகர சபைக்கும் மொரட்டுவை மாநகர சபைக்கும் புதிய லங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனுக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டன.

வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ள பல அரசியல் கட்சிகள் இன்று வேட்புமனுவை சமர்ப்பிக்கவில்லை.

 

இதன்படி, கொழும்பு மாநகர சபை, தெஹிவளை மாநகர சபை மற்றும் கொலன்னாவ மாநகர சபை ஆகியவற்றுக்கான கட்டுப்பணத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுன வைப்பிலிட்டிருந்த போதிலும், அவர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை. கடுவெல மாநகர சபையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி கட்டுப் பணத்தை செலுத்திய போதிலும் அவர்கள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் கொழும்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

 

வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேச்சைக் குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

அதேபோன்று, தனமல்வில உள்ளூராட்சி சபைக்கு சுதந்திர மக்கள் முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. போபே பொத்தல மற்றும் அக்மீமன உள்ளூராட்சி சபைகளுக்கான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் உள்ள உக்குவெல உள்ளூராட்சி சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஒருவர் தனது வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தார், ஆனால் அது சட்டத்தரணி அல்லது சமாதான நீதவானின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரை இல்லாததால் நிராகரிக்கப்பட்டது.