படகின் மீது கப்பல் ஏறியதில் 5 பேர் பலி

23.03.2022 16:24:35

வங்கதேசத்தில் சுற்றுலாப் படகின் மீது கப்பல் ஒன்று மோதி மூழ்கடித்ததால் 5 பேர் பலியான துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வங்கதேச தலைநகர் டாகாவிற்கு அருகிலுள்ள ஷிடாலக்ஷ்யா நதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சுற்றுலாப் படகு கிளம்பியது. ஏராளமான பயணிகள் அப்படகில் பயணித்ததாக கூறப்படுகிறது. திடீரென சுற்றுலாப் படகின்மீது ருபோஷி-9 எனும் சரக்குக் கப்பல் மோதியது. படகில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து உயிரை காப்பாற்ற சிலர் தண்ணீரில் குதித்தனர். ஆனால் அனைவரும் குதித்து தப்பிக்கும்முன், வேகத்தை கட்டுப்படுத்த முடியாத சரக்குக் கப்பல், படகை மூழ்கடித்துவிட்டது.

இதனை அருகில் சென்ற மற்றொரு கப்பலில் பயணித்த சிலர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த விபத்தில் படகில் பயணித்த ஒரு ஆண், 3 பெண்கள், ஒரு குழந்தை என 5 உயிரிழந்தனர். 22 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணிகள் நடைபெறுகிறது. சுற்றுலா படகின் மீது கப்பல் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.