களம் இறங்கும் இலங்கை, பங்களாதேஷ் அணிகள்

18.03.2024 07:00:00

சட்டோக்ராம், ஸஹுர் அஹ்மத் சௌதரி விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (18) நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க 3ஆவதும் கடைசியமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் இலங்கையும் பங்களாதேஷும் களம் இறங்கவுள்ளன.

முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வரவேற்பு நாடான பங்களாதேஷ் 6 விக்கெட்களால் வெற்றியீட்டி தொடரில் 1 - 0 என முன்னிலை பெற்றது.

ஆனால், 2ஆவது போட்டியில் பதிலடி கொடுத்த இலங்கை 3 விக்கெட்களால் வெற்றியீட்டி தொடரை 1 - 1 என சமப்படுத்தியது.

முதல் இரண்டு போட்டிகள் பகல் - இரவு போட்டிகளாக நடைபெற்றதுடன் அந்த இரண்டு போட்டிகளிலும் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணிகளே வெற்றிபெற்றன.

எனினும் இந்தப் போட்டி சூரிய வெளிச்சத்தில் நடைபெறுவதுடன் காலையில் ஆடுகளத்தில் ஈரலிப்புத்தன்மை இருப்பதால் முதல் சில ஓவர்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக அமையும் என கருதப்படுகிறது. எனினும் நேரஞ்செல்லசெல்ல துடுப்பாட்ட வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது போட்டியின்போது உபாதைக்குள்ளான வேகப்பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷன்க இன்றைய போட்டியிலும் ஐ.பி.எல்.லின் சில ஆரம்பப் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சு சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்னவை இணைப்பதா அல்லது துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தும் வகையில் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸை இணைப்பதா என்பது குறித்து அணி முகாமைத்துவம் இன்று காலை தீர்மானிக்கவுள்ளது.

துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறிவரும் அவிஷ்க பெர்னாண்டோவுக்குப் பதில் கமிந்து மெண்டிஸ் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக அறிய கிடைக்கிறது.

முதலிரண்டு போட்டிகளிலும் வேகப்பந்து வீச்சாளர் டில்ஷான் மதுஷன்க மாத்திரமே திறமையாக பந்துவீசி தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார்.

சுழல்பந்துவீச்சாளர்களில் 2ஆவது போட்டியில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

துடுப்பாட்டத்தைப் பொறுத்த மட்டில் 2ஆவது போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவித்து அசத்தியிருந்ததுடன் உதவி அணித் தலைவர் சரித் அசலன்க 90க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

எனினும் அவிஷ்க பெர்னாண்டோ (விளையாடினால்), அணித் தலைவர் குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே ஆகியோர் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடுவது அவசியமாகும்.

இப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடினால் 300க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவிக்க வேண்டிவரும். களத்தடுப்பில் ஈடுபட்டால் பங்களாதேஷை 225 ஓட்டங்களுக்குள் இலங்கை கட்டுப்படுத்த வேண்டும். அல்லது இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

முதல் இரண்டு போட்டிகளில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்த லிட்டன் தாஸ் இந்தப் போட்டியில் விளையாடமாட்டார் எனவும் வேகப்பந்துவிச்சாளர் தன்ஸிம் ஹசன் சக்கிப் உபாதை காரணமாக விளையாடமாட்டார் எனவும் அறிவிக்கப்படுகிறது.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ அல்லது கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ் (தலைவர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, சாமிக்க கருணாரட்ன, ப்ரமோத் மதுஷான், லஹிரு குமார.

பங்களாதேஷ்: சௌம்யா சர்க்கார், அனாமுல் ஹக் அல்லது தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), தௌஹித் ரிதோய், மஹ்முதுல்லா, முஷ்பிக்குர் ரஹிம், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசெய்ன் அல்லது தய்ஜுல் இஸ்லாம், முஸ்தாபிஸுர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்மத்.