கொக்குத்தொடுவாய் விவகாரம்; சர்வதேச விசாரணை வேண்டும்!

12.09.2023 09:56:43

”கொக்குத்தொடுவாய் மனித புதை குழி விவகாரத்துக்கு சரியான தீர்வினைப் பெறவேண்டுமானால் சர்வதேச விசாரணை அவசியம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியைப்  பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது  குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ’முன்பு அகழப்பட்ட முறைக்கும் தற்போது அகழப்படுகின்ற முறைக்கும் வித்தியாசம் இருப்பதனை பார்க்க முடிகின்றது.  எடுக்கப்பட்ட தடயப்பொருட்களை வைத்து பார்க்கின்ற போது நூற்றுக்குநூறு வீதம் பெண் போராளிகளுடையது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டிருக்கின்ற காணாமல் ஆக்கப்பட்ட போராளிகளுடையதாக இருக்கும் என்பதற்கான ஆதாரமாக தான் இதனை பார்க்கின்றோம்.

கடந்த 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இவ் விடயம் தொடர்பில் அண்மைக்காலமாக இவ்வாறு தமிழ் பகுதிகளில் தமிழ் இளைஞர், யுவதிகள் எலும்புக்கூடுகளாக எடுக்கப்பட்டிருக்கின்ற விடயம் தொடர்பில் எந்தவித விடயங்களும் முன்வைக்கப்படவில்லை.

இன்றையதினம்( 11)  ஆரம்பிக்கின்ற 54 ஆவது கூட்டத்தொடர் ஒருமாதங்களில் முடிவடைகின்ற போதாவது முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தையும் சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். அதற்கு சரியான விடையை தருவதற்கு சர்வதேச ரீதியான விசாரணை வேண்டும் என்பதனை மிகப்பெரிய அடையாளமாக இதனை கருத்தில் எடுப்பார்கள் என பூரணமாக நம்புகின்றோம்.

இதற்கு சர்வதேசத்தை தவிர வேறு யாராலும் இதற்கு ஒரு தீர்வை எட்ட முடியாது அதனால் தான் நாங்கள் சர்வதேச சமூகத்தை நம்புகின்றோம். இறுதி யுத்தத்தின் போதும் ஐக்கிய நாடுகள் சர்வதேசத்தினுடைய நிறுவனங்கள் இந்த மண்ணிலே இருந்து மக்கள் மறிக்கும்போது விட்டு சென்றிருந்தார்கள் .

தற்போதும் அவர்களால் தான் ஒரு தீர்வை எட்ட முடியும். அதனால் தான் மீண்டும் அவர்களிடத்தே வலியுறுத்துகின்றோம். அந்தவகையில் இந்த இடத்தினை பார்வையிட்டு எமது உறவுகள், பிள்ளைகள், குழந்தைகள் எவ்வாறு மிக மிலேட்சத்தனமாக , நாகரிகமற்ற முறையில் இலங்கை அரச பயங்கரவாத படைகளால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இது மிகப்பெரிய சாட்சியாக இருக்கிறது.

இதற்கான கால மாற்றமும்,  சூழலும் சரியான விடையை தரும் என்ற நம்பிக்கையோடு தான் இந்த இடத்தை பார்வையிட்டு செல்கின்றோம் ” இவ்வாறு தெரிவித்துள்ளார்.