நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது
அமெரிக்கா இரகசியமாக வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை ரஸ்ய படையினருக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ச்சில் அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கிய உக்ரைனிற்கான பாதுகாப்பு உதவியின் ஒரு பகுதியான இந்த ஏவுகணைகள் இந்த மாதமே உக்ரைனை சென்றடைந்துள்ளன.
இந்த ஏவுகணைகளை ஆகக்குறைந்தது ஒரு தடவையாவது உக்ரைன் பயன்படுத்தியுள்ளது - கிரிமியாவில் நிலை கொண்டுள்ள படையினருக்குஎதிராக பயன்படுத்தியுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க முன்னர் ஏடிசிஎம்எஸ் ஏவுகணைகளை உக்ரைனிற்கு வழங்கியிருந்தது எனினும் அந்த ஏவுகணையை விட வலுவான ஏவுகணையை வழங்க தயக்கம் கொண்டிருந்தது.
எனினும் உக்ரைனிற்கு நீண்டதூர ஏவுகணைகளை வழங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி இரகசியமாக அனுமதி வழங்கியுள்ளார்.
இந்த ஏவுகணைகள் 300 கிலோமீற்றர் செல்லக்கூடியவை.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய முடியும் என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தனது நடவடிக்கை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த விடயத்தினை பகிரங்கப்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டதால் அமெரிக்கா இதனை பகிரங்கப்படுத்தவில்லை.
அமெரிக்கா எத்தனை ஏவுகணைகளை அனுப்பியுள்ளது என்பது தெளிவாகவில்லை எனினும் இந்த ஏவுகணைகள் போர்முனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன் தெரிவித்துள்ளார்
அவை மாற்றத்தை ஏற்படுத்தும் ஆனால் நான் முன்னர் சொன்னதை போல இலகுவான தீர்வுகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்
கிரிமியாவில் உள்ள விமானதளத்தை தாக்குவதற்கு புதிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தியுள்ளது என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.