அரசாங்கத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம்!

30.04.2026 08:47:41

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் நேற்று மாலை துண்டுப்பிரசுரபோராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த கால ஆட்சியாளர்களினால் தனியார் வைத்திய துறை பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்ட நிலையில் அதற்கான எதிர்ப்பினை மாணவர்கள் தொடர்ச்சியாக வழங்கிவரும் நிலையில் அதனை எதிர்த்த இந்த ஆட்சியாளர்கள் இன்று பாராமுகமாக இருந்துவருவதாக தெரிவித்து மாணவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கிருந்து மட்டக்களப்பு நகருக்குள் துண்டுப்பிரசுரம் வழங்கும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஒன்றியத்தின் தலைவர் உட்பட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகத்தினர், உறுப்பினர்கள்,மாணவர்கள் இந்த துண்ப்பிரசுரப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவசக்கல்வியை பாதுகாப்போம் என்னும் தலைப்பில் இந்த துண்டுப்பிரசுரப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் மக்களுக்கும் இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சிஸ்டம் சேஞ் என்ற கோசத்துடன் ஆட்சிக்குவந்த இந்த அரசாங்கத்திற்கும் கடந்தகால அரசாங்கத்திற்கும் இடையில் எந்த மாற்றமும் இல்லையென்பதை மக்கள் உணரத்தொடங்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் நிலைகளினால் கல்வித்துறை,சுகாதார துறை என்பனவற்றில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வைத்தியதுறை பாரிய ஆபத்து நிலையினை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளதாக இதன்போது மாணவர்களினால் தெரிவிக்கப்பட்டது.