மற்ற படங்களையும் நினைத்துப் பார்ப்பாரா நயன்தாரா ?

11.08.2021 14:53:30

தமிழ் சினிமாவில் இப்போதைக்கு யார் நம்பர் 1 நடிகை என்று கேட்டால் நயன்தாரா என்று யோசிக்காமல் சொல்லிவிடுவார்கள். சுமார் 5 கோடி வரை அவர் சம்பளம் வாங்குவதாகத் தகவல். தென்னிந்திய மொழிகளில் உள்ள பல இளம் நடிகர்கள், சீனியர் நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்கவே அதிகம் ஆசைப்படுகிறார்கள் என்பது திரையுலகத் தகவல். ஆனாலும், எந்த ஒரு படத்தையும் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக் கொள்வதில்லையாம் நயன்தாரா.


அடுத்து ஷாரூக்கான் ஜோடியாக ஹிந்திப் பக்கமும் போக உள்ளார். இதனிடையே, நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் நாளை மறுதினம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அந்தப் பட பிரமோஷனுக்காக பல வருடங்களுக்குப் பிறகு டிவி பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார் நயன்தாரா. 'நெற்றிக்கண்' படம் அவருடைய வருங்காலக் கணவர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள படம். அந்தப் படத்திற்கு மட்டும் டிவி பேட்டி வரை செல்லும் நயன்தாரா அவர் நடிக்கும் மற்ற படங்களின் பிரமோஷனைப் புறக்கணிப்பது சரியா என தற்போது திரையுலகத்தில் கேள்வி எழுந்துள்ளது.


ஆனால், 'நெற்றிக்கண்' படத்தை ஓடிடிக்காக அதிக விலை கொடுத்து வாங்கும் போதே கண்டிப்பாக டிவி பேட்டி தந்தாக வேண்டும் என கறாராக சொல்லிவிட்டார்களாம். எனவே தான் அதற்கு நயன்தாரா சம்மதித்தார் என்கிறார்கள். மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போதே எந்த பேட்டிக்கும் வர மாட்டேன் என கண்டிஷன் போட்டு கையெழுத்து வாங்கிவிடுவாராம் நயன்தாரா. அப்போது சரி என்று சொல்லிவிட்டு, பின்னர் பேட்டிக்கு வரவில்லை என்று குற்றம் சாட்டுவது சரியா என்கிறதாம் நயன்தாரா தரப்பு.

'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம், குற்றமே' என யார் யாரைப் பார்த்து சொல்ல முடியும் ?.