மக்கள் பலமே எமது அரசாங்கத்தின் பலம்.
மக்களின் பலத்தை மட்டுமே நம்பி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
புலத்சிங்களவில் நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, கடந்த 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் அமைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பணபலம், ஊடக பலம் அல்லது அரச அதிகாரத்தை பயன்படுத்தாமல் சாதாரண மக்களின் ஆதரவுடன் அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த அரசாங்கத்தை பதவியில் அமர்த்தியதும் மக்களே என்றும், அதனை முன்னோக்கி கொண்டு செல்வதும் பாதுகாப்பதும் மக்களே என்றும் கூறினார்.
நாட்டில் நீண்டகாலமாக நிலவிய ஊழல் மற்றும் முறைகேடுகளை ஒழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, சட்டவிரோதமாக டொலர்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட கருப்புப் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இதன் மூலம் திறைசேரிக்கு வர வேண்டிய அரச வருவாய் கசிவதைத் தடுத்துள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் அரச வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் மக்களை இலக்காகக் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மகாபொல புலமைப்பரிசில், உர மானியம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டில் மூலதனச் செலவினங்களுக்காக 2 டிரில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்து மாவட்ட முன்னுரிமைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்தும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளின் பணிகளை ஆரம்பித்தல், ரயில் பாதைகளை மின்மயமாக்குதல், 4ஜி வசதியை விரிவுபடுத்துதல் மற்றும் டிஜிட்டல் அரச சேவைகளை அதிகரித்தல் உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்குகின்றன.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றங்களை ஒழிக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை விட்டு தப்பிச் சென்ற பல முக்கிய குற்றவாளிகள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சொத்துக்கள் அரசாங்கத்தின் பொறுப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தேர்தல்களை ஒத்திவைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளாது எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். மக்களிடம் நம்பிக்கை வைத்து ஜனநாயக முறையில் ஆட்சி நடத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவிய பழைய ஊழல் மற்றும் முறைகேடான அரசியல் கலாசாரத்தை மாற்றி, மக்களுக்கு பொறுப்புக்கூறும் புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.