இன்று நாட்டில் காட்டுச் சட்டமே உள்ளது! இன்று நாட்டில் காட்டுச் சட்டமே உள்ளது!
இன்று நாட்டில் காட்டுச் சட்டமே உள்ளது!
February 28, 2024 09:44 am
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு அல்லது அதன் அதிகாரங்களை குறைப்பதற்கு பல ஏற்பாடுகள் இருக்கின்றன. புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம், சில பதவிகளை நியமிக்க ஜனாதிபதியிடம் காணப்பட்ட பிரத்தியேக அதிகாரத்தை மட்டுப்படுத்தி,தடைகள் மற்றும் சமன்பாடுகளை ஏற்படுத்த பாராளுமன்ற அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. அரசியலமைப்பு பேரவை 26 ஆம் திகதி கூடிய போது பொலிஸ் மா அதிபரை நியமிப்பதற்கான பெயரை ஜனாதிபதி முன்மொழிந்திருந்தார். பிரேரணைக்கு ஆதரவாக 4 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகியதாகவும், இருவர் வாக்களிப்பை தவிர்த்தும் இருந்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இங்கு சபாநாயகருக்கும் வாக்கு உண்டு. இது அறுதியிடும் வாக்கு மட்டுமே. 5 வாக்குகள் இருந்தால் மட்டுமே அது நிறைவேற்றப்படும் அல்லது நிராகரிக்கப்படும் மற்றும் வாக்குகளில் சமநிலை ஏற்பட்டால் மட்டுமே சபாநாயகர் வாக்களிக்க முடியும், ஆனால் 26 ஆம் திகதிஅவ்வாறு சமநிலை ஒன்று ஏற்பட்டிருக்கவில்லை.
என்றாலும், சபாநாயகர் அறுதியிடும் வாக்கை வழங்கி தற்போதைய பொலிஸ்மா அதிபரின் பெயரை சட்டவிரோதமாக உறுதியளித்தார். அவ்வாறு எதுவும் நடக்கவில்லை, கூட்டம் முடிந்து உறுப்பினர்கள் வெளியேறிய நேரத்தில் கூட, அவ்வாறானதொரு பெயர் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், உறுப்பினர்கள் வெளியேறிய பின்னர் சபாநாயகர் பெயரை உறுதி செய்துள்ளார், இது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தான் பொய் கூறுவதாக இருந்தால் தம் மீது வழக்கு தொடரலாம். சபாநாயகர் இங்கு அரசியலமைப்பை மீறியுள்ளார். இந்நாட்டில் சட்டம் சட்டவிரோதமாகிவிட்டது. உயர் நீதிமன்றம் வழங்கிய எந்தத் திருத்த பரிந்துரைகளையும் உள்வாங்காது நிகழ்நிலை காப்பு சட்டத்தில் கூட சபாநாயகர் கையெழுத்திட்டார். சபாநாயகர் இரண்டு தடவைகள் அப்பட்டமாக அரசியலமைப்பை மீறியுள்ளார், நாட்டில் இன்று காட்டுச் சட்டமே இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ்,81 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பஸ் மாத்தளை, ரத்தோட்டை கைகாவல மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கை பலனளித்துள்ளது. பரேட் சட்டம் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது,
2 - 3 வருடங்களாக,தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி,இந்நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 50% மற்றும் 52% வேலைவாய்ப்பில் பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முறைவோர் மற்றும் முயற்சியாண்மைகள் சார்பில், அரசாங்கம் பிறப்பித்த பரேட் சட்டம் மூலம் தங்கள் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இந்த தொடர் கோரிக்கையின் விளைவாக, டிசம்பர் 15 ஆம் திகதி வரை பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.இது மகிழ்ச்சியான விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பரேட் சட்டத்திற்கு எதிராக தாம் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டதாகவும், இறுதியாக அந்த விமர்சனங்களுக்கு பலன் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், ஆனால் இந்த தொழில் முனைவோரை தொழில் முயற்சியில் மேம்படுத்தவும், பொருளாதார செயல்முறையை வலுப்படுத்துவதற்கும் தேவையான மூலதனத்தை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
என்னை பஸ் மேன் என்று கூறும் பொறாமைக் காரர்கள் பொய்யான செய்திகளை உருவாக்குகி வருகின்றனர்,
பிரபஞ்சம் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காட்டாத ஒரு குழுவினர் பொறாமைத்தனமாக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தம்புத்தேகம தேசிய பாடசாலைக்கு பஸ் ஒன்றை நன்கொடையாக வழங்கியதன் பின்னர் தம்மை பஸ் மேன் என்று அழைத்ததாகவும், ஆனால் அவ்வாறு அழைப்பதைக் கொண்டு தாம் சலைக்கவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தம்புத்தேகம பாடசாலைக்கு தாம் வழங்கிய பஸ் பழுதடைந்துள்ளதாக அண்மைய நாள் பத்திரிகை ஒன்றின் ஊடாக போலியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் ஆராய்ந்த போது அது பொய்யான கதை எனவும், திருகோணமலையில் நடைபெற்ற சாரணர் ஜம்போரிக்கு கூட அந்த பாடசாலையின் பிள்ளைகள் இதே பஸ்ஸிலயே சென்றுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நாட்டின் கல்வி மேம்படுவதை பெரும் புரட்சியாளர்கள் விரும்புவதில்லை,
இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கும் போது கபட நாடகம் ஆடாமல் நாட்டை அபிவிருத்தி செய்ய தன்னுடன் கை கோர்க்குமாறும், இறுதியில் நன்மைகள் மக்களுக்கே சென்றடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜே.ஆர் ஜயவர்தனவின் காலத்திலும் கம்உதாவ, மஹாவெலி, மஹாபொல என 3 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த பொதுச் சேவையால் நாட்டு மக்கள் பயனடைந்தனர். எதிர்க்கட்சியில் இருக்கும் எவரையும் தன்னுடன் இணைந்து மக்களுக்கு சேவை செய்ய அழைப்பு விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
நாட்டில் பாதி பேர் ஏழ்மையில். 800 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன,
தற்போது, நாட்டு மக்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றனர், நாட்டின் பாதி பேர் வறுமையில் வாடுகின்றனர். யுனிசெப் ஆய்வின்
படி, 17-18 வயதுக்குட்பட்ட 40% பிள்ளைகளே பாடசாலை கல்வியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 18 வயதை அடையும் போது, அந்த வயதினரில் 60% பேர் கல்வியை கைவிட்டுள்ளனர். இது நல்ல போக்கல்ல எனவும், 2023ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 800 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.