“பொய்...” - சட்டப்பேரவையில் கவனம் பெற்ற விவாதம்!

12.08.2026 15:03:00

நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் குட்டி கதை ஒன்றைக் கூறினார். அதில், “வெற்றி பெறுவதற்காகப் பொய் சொல்லாமல், குறுக்கு வழியைப் பின்பற்றாமல், நேர்மையாக உண்மையைச் சொல்லி வந்த இவரைத்தான் நாங்கள் தேர்வு செய்கிறோம்’ என்று கூறினாராம். வெற்றி அடைவதற்காகப் பொய் சொல்லாமல், குறுக்கு வழியைக் கடைப்பிடிக்காமல் நேர்மையாக இருந்தால், எல்லாமே இங்கே சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே (முதல்வர் விஜய்) சாட்சி.” எனத் தெரிவித்தார்.

அப்போது சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “பொய் என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘உண்மைக்கு மாறான’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொள்ளுங்கள்” என அமைச்சர் மரிய வில்சனை நோக்கிக் கூறினார். அதற்கு திமுக சட்டமன்ற தங்கம் தென்னரசு, “இந்தப் பேரவையினுடைய மரபுகளின் அடிப்படையில், பேரவையில் ஒரு உறுப்பினர் பொய் சொல்கிறார் என்றுதான் சொல்லக்கூடாதே ஒழிய, ‘பொய்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்பது அல்ல.

அப்படி என்றால், இங்கே இருக்கக்கூடிய தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லியிருப்பதைப் போல, ‘பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும்’ என்று ஒரு குறளை நான் சொல்கிறேன் என்றால், இதில் ‘பொய்’ என்ற வார்த்தையை மட்டும் எடுங்கள் என்று சொல்ல முடியுமா? அவையின் விதிப்படி, ஒரு உறுப்பினர் பொய் சொல்கிறார் என்றுதான் சொல்லக்கூடாதே தவிர, ‘பொய்’ என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்பது கிடையாது. அதனால், அமைச்சர் சொல்வதில் நீக்குவதற்கு எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, “கடந்த காலத்தில் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், ‘பொய்’ என்ற சொல் அவையில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் ‘உண்மைக்கு மாறாக’ என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் அப்படித்தான் இருந்தார்கள்; வார்த்தை நீக்கப்பட்டது. அதனால், ஏற்கனவே இருக்கின்ற மரபைத் தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்” எனத் தெரிவித்தார்.