இலங்கை டிட்வா புயலின் தீவிரம் அதிகரிப்பு.

28.11.2025 14:10:14

டிட்வா புயலின் தீவிரம் குறித்து அறிவித்துள்ளார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா.

இவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

டிட்வா புயலின் வெளி வளையமானது தற்போது வடக்கு மாகாணத்தை தொட்டுள்ளது. இதன்படி டிட்வா புயலின் மையம் இன்று இரவு வட மாகாணத்துக்குள் பிரவேசிக்கும் வாய்ப்புள்ளது.

டிட்வா புயல் வெளி வளையத்தையும் தொட்டிருப்பதனால் படிப்படியாக மழை அதிகரித்து மிகக் கனமழை கிடைக்கும், காற்றின் வேகமும் அதிகரிக்கும். பல குளங்களுக்கு அதிகளவான நீர் வரத்தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக கனமழை கிடைக்கும்.

இங்கு பல குளங்கள் வான் பாயத் தொடங்கியுள்ளன. பல குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சில குளங்கள் உடைப்பெடுத்துள்ளன. மேலும் சில குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளன. ஆகவே குளங்களுக்கு அண்மித்துள்ள மக்களும், தாழ்நிலப் பகுதியில் உள்ள மக்களும் மிக அவதானமாக இருப்பது அவசியம். தேவையேற்படின் இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு நகருங்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண நகரை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் ஏனைய மக்கள் நிலைமையைப் பொறுத்து இருள்வதற்கு முன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.

முக்கியமாக மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடற்கரையோரங்களில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகும் அபாயம் உள்ளது. ஆகவே வடக்கு மாகாணக் கடற்கரையோர மக்கள் அவதானமாக இருக்கவும். மத்திய, மேற்கு மற்றும் வடமேல் மாகாணத்திலும் தொடர்ந்த கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.