"இந்தியாவில் சந்திக்க காத்திருக்கிறோம்" .

19.03.2025 07:55:56

பூமிக்கு திரும்பி வரும் சுனிதா வில்லியம்ஸ்க்கு இந்திய பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் திகதி ஸ்டார்லைனர் விண்கலன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். 8 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டு புறப்பட்ட பயணத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்துள்ளார்.

இந்நிலையில் அவர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு 16ஆம் தேதி சென்றது.

அந்த விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர்உட்பட 4 பேர் பூமிக்கு புறப்பட்டுள்ளனர். இந்தியா நேரப்படி நாளை அதிகாலை பூமிக்கு வருவார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுனிதா வில்லியம்ஸ்க்கு எழுதிய கடிதத்தை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில், "இந்திய மக்களின் சார்பாக உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நிகழ்வில் பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவைச் சந்தித்தேன்.

எங்கள் உரையாடலின் போது உங்கள் பெயர் வந்தது, உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம்.

இந்த உரையாடலுக்குப் பிறகு, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவதை என்னால் தடுக்க முடியவில்லை. நான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அதிபர் டிரம்ப் அல்லது அதிபர் பைடனைச் சந்தித்த போதெல்லாம், உங்கள் நலனைப் பற்றி விசாரித்தேன்.

1.4 பில்லியன் இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறார்கள். சமீபத்திய முன்னேற்றங்கள் உங்கள் ஊக்கமளிக்கும் உறுதியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயங்களுக்கு நெருக்கமானவர். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைச் சந்திக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை இந்தியா மகிழ்ச்சியாக வரவேற்கிறது. உங்களுக்கும் வில்மோருக்கும் பாதுகாப்பான வருகைக்கு வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.