வந்தே மாதரம் இந்து மத பாடலா?

21.08.2026 12:08:00

வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்ட 'வந்தே மாதரம்' பாடல் குறித்த மூத்த நடிகை ஷர்மிளா தாகூரின் சமீபத்திய கருத்துகளுக்கு நடிகை கங்கனா ரனாவத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

 

முன்னணி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஒற்றை கடவுள் கோட்பாட்டை பின்பற்றுபவர்களுக்கு இந்த பாடலின் சில வரிகள் கடினமாக இருக்கலாம் என்றும், அதிலுள்ள இந்து தெய்வங்களின் குறிப்புகளை தவிர்த்து முதல் இரண்டு வரிகளை மட்டும் தேசிய பாடலாப் பயன்படுத்தலாம் என்றும் ஷர்மிளா தாகூர் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக பதிலளித்துள்ள கங்கனா ரனாவத், ஷர்மிளா தாகூரின் கருத்துரிமையை மதிப்பதாக கூறியுள்ள அதேவேளையில், கவிதைகள் மற்றும் கலை படைப்புகளை மத ரீதியான கோணத்தில் மட்டுமே சுருக்குவதை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். கலை படைப்புகளில் உள்ள சொற்கள் பெரும்பாலும் உருவகங்களாகவே பயன்படுத்தப்படுகின்றன என்றும், அவற்றை நேரடியான மத நூல்களாக பார்க்கக் கூடாது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

 

வந்தே மாதரம் என்பது சுதந்திர போராட்டத்தின் ஆத்மா என்றும், தேசத்தில் சக்தியை எழுப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மகத்தான காப்பியம் என்றும் கங்கனா குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து முன்னணி ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.