50 வருடம் முன்னோக்கி செல்லும் கதையில் நடிக்கும் சூர்யா

13.01.2022 06:45:39

 

தற்போது சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் அயலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரவிக்குமார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். அதிகப்படியான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், ஜெய்பீம் படத்தையடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருக்கும் சூர்யா அடுத்தபடியாக பாலா இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

அதையடுத்து ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு சூர்யா கால்சீட் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு அந்த கதை ஐம்பது வருடங்கள் கழித்து எதிர்காலத்தில் எந்த மாற்றங்கள் நடக்கும், மக்களின் அவசர வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்த ஒரு கற்பனையில் இந்த படம் உருவாகிறது. இந்தப்படத்தின் கதை விவாதம் உள்ளிட்ட பணிகள் மட்டுமே ஒரு வருடம் நடைபெற உள்ளதாம். அதனால் அடுத்தாண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.