சவாலாகும் சீனாவின் நகர்வு - பிரித்தானிய இராணுவ இரகசியம் கசியுமா ?

26.11.2022 11:22:56

பிரித்தானியாவின் முன்னாள் விமானப்படை வீரர்களை 2019 முதல் சீனா பணியமர்த்தியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பணியமர்த்தப்பட்டுள்ள வீரர்கள், அதிநவீன போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இவ்வாறு, பிரித்தானிய நாட்டின் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்களை சீனா, பணிக்கு அமர்த்தியுள்ளதன் மூலம் சீனா, அமெரிக்காவுடனான மோதலுக்கு தயாராகிறதா, என்கிற கேள்வியும் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

பிரித்தானிய விமானப்படை

இவ்வாறான நிலையிலேயே சீனா தனது விமானப்படைக்கு பயிற்சி வழங்க பிரித்தானியாவில் உள்ள ஓய்வுபெற்ற விமானப்படை வீரர்களை பணியமர்த்தியுள்ளதான தகவல் சர்வதேச ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளன.

இவ்வாறு பணியமர்த்தப்படும் வீரர்கள் நேடியாக சீனாவுக்கு சென்று பயிற்சி கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

மாறாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு விமான பயிற்சி நிலையத்தில் சீன வீரர்களுக்கு பயிற்சி கொடுத்தால் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் பயிற்சியாளர்களாக பிரித்தானிய வீரர்கள் மட்டுமல்லாது ஆவுஸ்திரேலியாவின் வீரர்களும் அடங்குவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிநவீன போர் விமானங்கள் 

இவ்வாறான நிலையில், இது போன்ற பணிகளில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்று இரு நாடுகளும் தங்கள் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

இவ்வாறு அறிவுறுத்தல்களை மீறி யாரெல்லாம் சீன வீரர்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்களோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

சீனாவிற்கு பயிற்சி வழங்குபவர்கள், அதிநவீன போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது டைபூன்ஸ், ஜாகுவார்ஸ், ஹாரியர்ஸ் மற்றும் டொர்னாடோஸ் உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்களை இயக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை

 

இந்த வகை விமானங்கள் அனைத்துமே ஒலியை விட வேகமாக பறக்கக்கூடியவை. அதேபோல இவர்களை பணியமர்த்துவதன் மூலம் பிரித்தானிய விமானப்படையின் இரகசியங்களை பெறுவதற்கும் சீனா திட்டமிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரித்தானியாவின் உளவுத்துறை நிறுவனமான GCHQ இன் தலைவர் ஜெர்மி ஃப்ளெமிங், சீன தொழில்நுட்பம் பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு பெரும் அச்சுறுத்தலை முன்வைக்கிறது என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

 

மேலும், இவ்வாறு பயிற்சி கொடுக்க ரூ.2.2 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான நிலை சமீப ஆண்டுகளாக அதிகரித்துச் செல்வதாகவும் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

அதுமட்டுமன்றி, சில நாட்களுக்கு முன்னர்தான் தைவான் விவகாரத்தில் சீனா தனது விமானப்படைகளை கொண்டு அதிரடியான போர் பயிற்சிகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.