ஐரோப்பாவில் வெடிக்கும் மக்கள் போராட்டம்!

28.10.2026 14:56:16
  • அட்லாண்டிக் முதல் ஆல்ப்ஸ் வரை வீதிகளில் இறங்கிய லட்சக்கணக்கான சாமானியர்கள்
  • விலைவாசி உயர்வு, வீடற்ற நிலை மற்றும் ஊதியத் தேக்கத்தால் கருகும் ஐரோப்பியக் கனவு

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மக்கள் போராட்டத் தீ வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. விண்ணைத் தொடும் எரிபொருள் விலை, எட்டாக்கனியாகும் வீட்டு வாடகை, போதிய வசதிகள் இல்லாத பள்ளிகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த அச்சம் எனப் பல்வேறு பிரச்சினைகள் சாமானியர்களின் வீடுகளுக்குள் நுழைந்துள்ளன. இப்போது அவை அனைத்தும் தெருக்களில் மாபெரும் போராட்டங்களாக உருவெடுத்துள்ளன.

 

ஐரோப்பாவை வெளியிலிருந்து பார்க்கும்போது, பனிமூடிய வீதிகளும் மினுமினுக்கும் கோபுரங்களும் வசந்தத்தின் அடையாளங்களாகவே காட்சி அளிக்கின்றன. ஆனால், அந்த அழகிய சுவர்களுக்குப் பின்னால் லட்சக்கணக்கான சாமானிய மனிதர்களின் வீடுகளில் அடுப்புகள் எரியாமல் முடங்கியுள்ளன. “அட்லாண்டிக் கடற்கரை முதல் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வரை எங்களால் இனி வாழ முடியாது” என்ற ஒற்றைக் குரல் இன்று ஐரோப்பா முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஒரு காலத்தில் உலக நாடுகளுக்குப் பொருளாதாரப் பாடங்களைக் கற்றுக்கொடுத்த ஐரோப்பிய வல்லரசுகள், சொந்த நாட்டு மக்களின் கோப அலைகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறி நிற்கின்றன.

முக்கியப் புள்ளிவிவரங்கள்: ஒரு பார்வையில்

பரவலான கொந்தளிப்பு: பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், அல்பேனியா உள்ளிட்ட நாடுகளின் பல பிரதான நகரங்களில் பல வாரங்களாகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சில இடங்களில் மோதல்கள், கடைகள் சேதப்படுத்தப்படுதல் மற்றும் தீவிரக் கைது நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.

கல்வி மற்றும் வாழ்வாதார நெருக்கடி: பிரான்ஸில் பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு எதிராகவும், இத்தாலியில் குறைந்த ஊதியம், வேலைவாய்ப்பின்மை மற்றும் மருத்துவ வசதிக் குறைபாடுகளுக்கு எதிராகவும் பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

கோர்ஸ்சேர்

 

அரசியல் மாற்றம் கோரும் அல்பேனியா: தலைநகர் டிரானாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும், பிரதமர் எடி ராமா பதவி விலகக் கோரியும் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டு வசதிச் சீர்திருத்தங்கள்: ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் எட்டாக்கனியாக மாறியுள்ள வீட்டு வாடகையைக் கட்டுப்படுத்தக் கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வளரும் இளைஞர் அதிருப்தி: ஐரோப்பாவில் வாழ்க்கைச் செலவு, கல்வி மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பாக இளைஞர்களிடையே அதிருப்தி அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் போராட்டத்திற்கான பின்னணியும்

மேற்கத்திய நாடுகளின் உண்மை முகம் இன்று வறுமை, வேலையின்மை மற்றும் வாழ்க்கைச் நிச்சயமின்மையால் வெளிப்பட்டு வருகிறது. இப்போராட்டங்கள் உருவெடுக்கப் பல ஆழமான கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக அமைந்துள்ளன.

எரிபொருள் மற்றும் புவிசார் அரசியல்: உக்ரைன்–ரஷ்யப் போர் மற்றும் மத்திய கிழக்கு மோதல்களால் மலிவான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டு, உற்பத்தி மற்றும் வாழ்க்கைச் செலவு பல மடங்கு உயர்ந்தது.

 

பணவீக்கமும் வீட்டு வாடகை உயர்வும்: அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்களின் ஊதியம் உணவிற்கும் வாடகைக்குமே சரியாக உள்ளது. ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் வாடகை கட்டுக்கடங்காமல் உயர்ந்ததால், எளிய மக்கள் சாலையோரங்களிலும் கூடாரங்களிலும் தங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஊதியத் தேக்க நிலையும் அரசுச் செலவினக் கட்டுப்பாடுகளும்: விலைவாசி 30% வரை உயர்ந்த நிலையிலும் தொழிலாளர்களின் ஊதியம் உயரவில்லை. மாறாக, நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கக் கல்வி, மருத்துவம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களில் அரசுகள் கட்டுப்பாடுகளை மேற்கொண்டது மக்களின் கோபத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்றது.

பிரான்ஸ்: மாணவர் எழுச்சி, வன்முறை மற்றும் ட்ரம்ப்பின் கருத்து

இந்தப் போராட்ட அலையின் முதன்மை மையப்புள்ளியாகப் பிரான்ஸ் விளங்குகிறது. செப்டம்பர் மாத இறுதியில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வீதிக்கு வரத் தொடங்கினர். போதிய ஆசிரியர்கள் இல்லாமை, மோசமான உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பு ஆகியவற்றுக்கு எதிராக இப்போராட்டம் தொடங்கியது. எனினும், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்கெனவே கொதித்திருந்த பொதுமக்கள் மாணவர்களுடன் கைகோர்த்ததால், இது நாடு தழுவிய மக்கள் எழுச்சியாக மாறியது.