கோகோ கோலா, பெப்சி அதிரடி அறிவிப்பு..!
உக்ரைனை தன்வசமாக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் நேற்று 13-வது நாளாக நீடித்தது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய படைகள் பேரழிவு தாக்குதல்களை நடத்தி வரும் அதே வேளையில், கடந்த சில நாட்களாக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்து வருகிறது.
ஆனால் எந்த ஒரு போர் நிறுத்தமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததுதான் சோகம். போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க முடியாத சூழலுக்கு இருநாடுகளும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதில் பாதிக்கப்படுவது மக்கள்தான்.
இதற்கிடையில் சுமி உள்ளிட்ட நகரங்களில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என இந்திய அரசு வைத்த கோரிக்கைக்கு இணங்க ரஷியா நேற்று தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. அதோடு தலைநகர் கீவ், சுமி உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரும், உக்ரைன் மக்களும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான மனிதாபிமான வழித்தடத்தையும் ரஷியா அறிவித்தது.
ஆனால் வழக்கம் போலவே இந்த போர்நிறுத்த அறிவிப்பு வெற்று வார்த்தையாக போனது. தற்காலிக போர்நிறுத்தம் அறிவித்த கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து குண்டு வீச்சில் ஈடுபட்டன. அதுமட்டும் இன்றி மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அறிவிக்கப்பட்ட மனிதாபிமான வழித்தடத்திலும் குண்டுகள் வீசப்பட்டன.
இதனிடையே உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன. இதன்படி அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன. தொடர்ந்து ரஷியா மற்றும் பெலாரசில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அதிரடியாக அறிவித்தது.
மேலும் ரஷியாவின் புதிய 'போலி செய்தி' சட்டத்தினால் எங்கள் வீடியோ சேவையில் நேரடி ஒளிபரப்பு நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என டிக்டாக் செயலி நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து ரஷியாவில் தங்களது ஒளிபரப்பு சேவையை நிறுத்தி உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் மீதான ரஷிய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆப்பிள், லிவிஸ்,நெட் பிளிக்ஸ், ஐ.பி.எம், மெக்டொனால்டு போன்ற பல நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இதனைத்தொடர்ந்து காபி ஹவுஸ் எனும் ஸ்டார்பக்ஸ் நிறுவனமும் ரஷியாவில் தங்களது அனைத்து வணிக நடவடிக்கைகளையும் இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போர் எதிரொலியாக, ரஷியாவில் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவதாக கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் அதிரடியாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக கோகோ கோலா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைனில் நடந்த இந்த சோகமான நிகழ்வுகளால் மனசாட்சியற்ற விளைவுகளைத் தாங்கும் மக்களுடன் எங்கள் இதயங்கள் உள்ளன. இதனால் ரஷியாவில் எங்களது வணிகத்தை நிறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக பெப்சி&கோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைனில் நிகழும் கொடூரமான நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, பெப்சி-கோலா மற்றும் 7Up மற்றும் மிரிண்டா உள்ளிட்ட எங்கள் உலகளாவிய குளிர்பான பிராண்டுகளின் விற்பனையை நிறுத்தி வைப்பதாக நாங்கள் அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.