கௌரி சங்கரியின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு – சுமந்திரன்

24.08.2021 06:04:00

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பாரியாரான சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரியின் மறைவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி மிகவும் அபாயகரமான வழக்குகளில்கூட அதனைத் தனது பெயரிலேயே துணிந்து தாக்கல் செய்து வாதாடியவர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் கொழும்புக் கிளையின் தலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் பாரியாரின் துயரில் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாமும் பங்குகொள்கின்றோம்.

அன்னாரின் மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சட்டத்துறையில் நீண்டகாலம் துணிச்சலுடன் செயலாற்றிய சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரியின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.