காபூலில் பயங்கரவாத தாக்குதல் : ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை
ஆப்கனின் காபூல் விமான நிலையத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் எச்சரித்துள்ளன.
ஆப்கனை தலிபான் கைப்பற்றியதை அடுத்து, அங்கிருந்து ஏராளமான வெளிநாட்டினர் விமானம் வாயிலாக தாயகம் திரும்பி வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அவற்றின் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளன. இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோர் தாயகம் திரும்புவதற்காக காபூல் விமான நிலையத்திலும், வெளியிலும் இரவு பகலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், ஆப்கன் சிறையில் இருந்து தலிபானால் விடுதலை செய்யப்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர், காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தலாம் என, ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
பிரிட்டன் ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் ஹீப்பே கூறும்போது, ''காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், அங்கு எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என, மிக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது,'' என்றார்.
''காபூல் தாக்குதலுக்கு உள்ளாகும் என தகவல் கிடைத்துள்ளதால் இனி அங்கு செல்வதும், அங்கிருப்போரை அழைத்து வருவதும் பாதுகாப்பானது அல்ல,'' என, டென்மார்க் ராணுவ அமைச்சர் டிரைன் பிராம்சென் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து நேற்று டென்மார்க் விமானம், இறுதியாக காபூலில் இருந்த அதன் ராணுவ வீரர்கள், துாதர்கள் உள்ளிட்ட 90 பேரை அழைத்து சென்றது. பெல்ஜியம், போலந்து நாடுகளும் மீட்பு பணியை நிறுத்தியுள்ளன.பிரான்ஸ் இன்று இரவுடன் காபூல் இடையிலான விமான சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், 'அமெரிக்க ராணுவம் 31ம் தேதி வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, தலிபான் எச்சரித்துள்ளது. இதனால் காபூல் விமான நிலையத்தில் காத்திருப்போரிடம் பீதி அதிகரித்துள்ளது.