"அமித் ஷாவை பார்த்ததும் மாற்றி மாற்றி பேசுவது ஏன்?".
|
தொகுதி மறுவரையறை மற்றும் காவிரி விவகாரத்தில் தமிழக வெற்றி கழக அரசின் நிலைப்பாடு குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார். அமித் ஷாவை பார்த்ததும் முதல்வர் விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டு அந்தர் பல்டி அடித்துவிட்டதாக தயாநிதி மாறன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஒரே வாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றி இருந்தார். கடந்த வாரம் 543 என்ற எண்ணிக்கையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் தொடர வேண்டும் என்ற அவர், நேற்று தென் மாநில முதல்வர் மாநாட்டில் பேசும்போது, மக்களவையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாமல் இருப்பதை சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும் என பேசியிருந்தார். |
|
இதை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழ்நாடு முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் தயாநிதி மாறன் கடுமையாக சாடியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே தென் மாநில முதல்வர்களின் கூட்டத்தை நடத்தி தீர்மானம் நிறைவேற்றியதாகவும் தயாநிதி மாறன் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், :சென்ற மாதம் தமிழகத்திற்கு வடக்கிலிருந்து வந்த கட்சியின் தலைவர் (ராகுல் காந்தியை சொல்கிறார்) வந்து, டிலிமிடேஷனை யார் ஆதரிக்கிறார்களோ அவர் தமிழ்நாட்டின் விரோதி. அவர்கள் எட்டப்பர்கள் என்று கூறிவிட்டு வீர வசனம் பேசிவிட்டு சென்றார். அப்பொழுது அந்த டிலிமிடேஷன் மசோதா நாடாளுமன்றத்தில் வரவிருப்பதாகவும் அதில் திமுக நிலைப்பாடு என்ன என்று ஒரு கேள்வியினை எழுப்பிவிட்டு சென்றார். திமுக நிலைப்பாடு அப்போதே நாங்கள் வராதா மசோதா பற்றி ஏன் பேசி இருக்கிறீகள் என கேட்டோம்.. டிலிமிடேஷன் பொறுத்தவரைக்கும் திமுகவின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடு தான். தமிழ்நாட்டுக்கும் துளியும் தீங்கும் வரவிடக்கூடாது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு இப்போது 7.18% ஒதுக்கீடு இருக்கிறது. அதே இட ஒதுக்கீடு இருந்தே தீர வேண்டும் என்பதே திமுகவில் நிலைப்பாடு. தமிழ்நாட்டுக்கு எந்தவிதம் பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காகவே கடந்த மார்ச் மாதம் முதல்முறையாக தென்னக முதல்வர்களை எல்லாம் அழைத்து ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தி, தீர்மானத்தை நிறைவேற்றியவர் ஸ்டாலின். சரித்திரம் தெரியாதவர்கள் ஏதேதோ பேசி வருகிறார்கள். காவிரி விவகாரத்தில் மவுனம் இந்தச் சூழலில் தான் இப்போது ஆளும் கட்சியாக இருப்பவர்கள் திடீரென அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார்கள். காவிரியில் தண்ணீர் வரவில்லை.. மேகதாது அணையை கட்ட துடிக்கிறார்கள். அந்த விவகாரத்தில் முதலில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தை போடுங்கள்.. ஒரு முடிவு எடுங்கள் என்றோம். ஆனால் தமிழ்நாட்டு முதல்வரோ அதை பற்றி எந்த முடிவும் எடுக்காமல்.. தமிழ்நாட்டில் உள்ள எம்பிக்களை வைத்து கூட்டத்தை நடத்தி ஒரு தீர்மானத்தை போடுகிறார்கள். அதுவும் என்ன தீர்மானம்? டிலிமிடேஷன் இப்படியே இருக்க வேண்டும். நோ டிலிமிடேஷன் என்பதையே அவர் சொன்னார். இப்போது இருக்கும் 543 தொகுதிகளும் அப்படியே இருக்க வேண்டும்.. இந்த எண்ணிக்கையை தொடர வேண்டும் என்று தீர்மானம் போட்டார். ஆனால், காவிரி பற்றியோ காவிரி பங்கீடு பற்றியோ பேசவே இல்லை. பின்னர் சட்டப்பேரவையிலும் இதே நிலைப்பாட்டை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார். நாங்களும் அந்த தீர்மானத்தை ஆதரித்தோம். அந்தர் பல்டி ஆனால், அதன்பிறகு அமித் ஷாவை சந்தித்த பின்னர் விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. முதலில் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று தீர்மானம் போட்டுவிட்டு, அமித் ஷாவை சந்தித்தவுடன் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? பாஜக கூட்டணிக்கு விஜய் செல்ல போகிறாரா? அமித் ஷாவை பார்த்ததும் அவருக்கு பயம் வந்துவிட்டதா? பல்டி அடித்த விஜய்யின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தின் முக்கியமான மாநில உரிமைகள் தொடர்பான விஷயங்களில் முதல்வர் விஜய் தெளிவான மற்றும் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்" என்றார். காவிரி விவகாரத்திலும் தமிழக அரசை அவர் கடுமையாக விமர்சித்தார்.. அவர் மேலும், "கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக பேசினார். ஆனால், அப்போது தமிழக முதல்வர் விஜய் அதற்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசாமல் அமைதியாக இருந்தார். தமிழ்நாட்டின் காவிரி உரிமை தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. ஆனால், மேகதாது விவகாரத்தில் விஜய் ஏன் மவுனமாக இருந்தார்? முதல்வர் தெளிவுபடுத்தணும்! தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பாக உங்கள் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை முதல்வர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் தொகுதி மறுவரையறைக்கு எதிரானவரா அல்லது ஆதரிப்பவரா? தமிழகத்துக்கு வந்து தொகுதி மறுவரையறையை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் எதிரிகள், எட்டப்பர்கள் என விமர்சித்தனர்.. இன்று அதே நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியவர் யார்? முதல்வர் விஜய் தானே" எனவும் கடுமையாக சாடினார். மேலும், விஜய் தனது நிலைப்பாட்டை மாற்றியது ஏன் என்பதற்கு தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்றும் அவரது உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறிய தமிழக மக்கள் என்று தயாநிதி மாறன் சாடினார். |