இறுதி நேரத்தில் வன்முறையை ராஜபக்ஷவினர் உருவாக்கினார்கள்

10.05.2022 10:05:51

அணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறையை ராஜபக்ஷவினர் உருவாக்கியிருக்கின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சமகால நிலை தொடர்பாக கருத்து தெரிவித்த போதே க.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ஷவினர் நேர்மையான விதத்தில் தமது பதவியை விட்டு விலகுவதற்கு தயாரில்லை. இந்த பதவி மூலமாக கோடான கோடியை சம்பாதித்து இருக்கின்றார்கள்.

அணையப் போகும் விளக்கு கடைசி நேரத்தில் வெளிச்சத்தை கொடுப்பது போல இறுதி நேரத்தில் வன்முறை உருவாக்கியிருக்கின்றார்கள்.

யார் மேல் குற்றத்தை சுமத்தப்போகின்றார்கள் என்பது தான் முக்கியம். கடந்த 70 வருடங்களாக தமிழர்களுக்கு நடைபெற்றது சிங்களவர்களுக்கு நடைபெறுகிறது. அதை நாம் முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டும்.

பிரதமர் பதவி விலகிய பின்னர் தேசிய அரசாங்கம் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது, தேசிய அரசாங்கமொன்று கோட்டாபய ராஜபக்ஷவினுடைய தலைமையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால் அவருடைய ஆட்சியைத்தான் வேண்டாம் என மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான ஒருவரை தலைவராக வைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை நிறுவ முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.

அவ்வாறு உருவானாலும் நாம் எந்தவிதமான பதவிகளை ஏற்பதாக இல்லை. எங்களை பொறுத்தவரை சில முக்கியமான விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். தொல்லியல் திணைக்களம் சம்பந்தமான ஆணைக்குழு வாபஸ் பெறப்பட வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் இருக்கும் இராணுவத்தினரை நன்றாகக் குறைக்க வழிவகை செய்தல் போன்ற கோரிக்கைகளை ராஜபக்ஷ அல்லாத அரசியல் தலைவர் எழுத்து மூலமாக உத்தரவாதம் தருவராக இருந்தால் நாங்களும் பங்கு பெற முடியுமா என்பது பற்றி அந்த நேரத்தில் யோசித்து முடிவெடுக்க முடியும் என்றார்.