RCBயை பந்தாடி வெற்றி பெற்றது மும்பை இண்டியன்ஸ்

12.04.2024 00:36:35

மும்பை வன்கடே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 25ஆவது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரை பந்தாடி சரிமாரியாக ஓட்டங்களைக் குவித்த மும்பை இண்டியன்ஸ் 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றிபெற்றது. 

இவ் வருடம் முதல் 3 போட்டிகளில் தொல்வி அடைந்த மும்பை இண்டியன்ஸ் இப்போது அடுத்தடுத்து 2 வெற்றிகளை ஈட்டியுள்ளது.

ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவித்த இப் போட்டியில் ஜஸ்பிரிட் பும்ராவின் இந்த வருடத்துக்கான சாதனை மிகு 5 விக்கெட் குவியல், இஷான் கிஷான், ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ், அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா ஆகியோரின் சரிமாரியான ஓட்டக் குவிப்பு என்பன மும்பை இண்டியன்ஸின் வெற்றியை உறுதி செய்தன.

துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக அமைந்த இப் போட்டியில் ஜஸ்ப்ரிட் பும்ரா 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தபோதிலும் பவ் டு ப்ளெசிஸ், ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கு கணிசமான ஓட்டங்களைப் பெற உதவின.

ஆனால், இஷான் கிஷான், ரோஹித் ஷர்மா, சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோரின் அதிரடிகளால் அவை வீண் போயின.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரினால் நிர்ணயிக்கப்பட்ட 197 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றிபெற்றது.

இஷான் கிஷான், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் பவர் ப்ளேயில் 72 ஓட்டங்களைக் குவித்ததுடன் 53 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்து மும்பை இண்டியன்ஸுக்கு ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய இஷான் கிஷான் 34 பந்துகளில் 7 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைக் குவித்தார்.

மொத்த எண்ணிக்கை 139 ஓட்டங்களாக இருந்தபோது ரோஹித் ஷர்மா 38 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து சூரியகுமார் யாதவ் அற்புதமாக துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களை விளாசி ஆட்டம் இழந்தார்.

இந் நிலையில் மும்பை இண்டியன்ஸின் வெற்றிக்கு தேவைப்பட்ட மேலும் 27 ஓட்டங்களை ஹார்திக் பாண்டியாவும் திலக் வர்மாவும் பெற்றுக்கொடுத்தனர்.

ஹார்திக் பாண்டியா 21 ஓட்டங்களுடனும் திலக் வர்மா 16 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றது.

றோயல் செலஞ்சர்ஸ் சார்பாக மூன்று வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றதுடன் அவர்கள் மூவருமே அந்த எண்ணிக்கைகளை அரைச் சதங்களாக உயர்த்திக்கொண்டனர்.

பவ் டு ப்ளெசிஸ் இரண்டு இணைப்பாட்டங்களில் பங்காற்றி அணியை நல்ல நிலையில் இட்டார்.

முதலில் 3ஆவது விக்கெட்டில் ரஜத் பட்டிதாருடன் 78 ஓட்டங்களைப் பகிர்ந்த பவ் டு ப்ளெசிஸ், 5ஆவது விக்கெட்டில் தினேஷ் கார்த்திக்குடன் மேலும் 48 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

பவ் டு ப்ளெசிஸ் 40 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களையும் பட்டிதார் 26 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

தினேஷ் கார்த்திக் 23 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இது இந்த வருடத்துக்கான இண்டியன் பிறீமியர் லீக்கில் பதிவு செய்யப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.