வங்கதேசத்தில் 25 பேர் உயிரிழப்பு

19.07.2024 08:02:56

இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என கோரி வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 25 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேரின் உடல்கள் இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

வங்கதேச அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணைய வசதியை முடக்கியுள்ளது. மெட்ரோ ரயில்கள் உட்பட போக்குவரத்து சேவை பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூட அரசு உத்தரவிட்டுள்ளது. டாக்கா-சிட்டகாங் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான வாகனங்கள் சிக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க 229 எல்லை பாதுகாப்பு வீரர் குழுக்கள் பணியில் உள்ளனர்.

 

அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு

வியாழக்கிழமை முழுவதும் போராட்டங்கள் ஓயாமல் நடைபெற்று வந்ததால், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தங்கள் பகுதியை விட்டு வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க தூதரகம் மூடப்படுவதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற வீரர்களின் பிள்ளைகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, மாணவர்கள் நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேச விடுதலைக்காக போரிட்ட வீரர்கள் ‘முக்தி யோதா’க்கள் என என்றழைக்கப்படுகின்றனர்.

இவர்களின் பிள்ளைகளுக்கு மூன்றில் ஒரு பங்கு அரசு பணிகள் ஒதுக்கப்படுமென அரசு அறிவித்தது

 

வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, அவர் என்ன கூறப் போகிறார் என நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், தவறு இழைத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர் என்று உறுதி அளித்தார். மாணவர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், நீதித்துறையின் மூலம் அவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்றும் கூறினார்.

அவரது பேச்சைக் கேட்ட பிறகு, மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். நாடு தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். பிரதமர் உரையை ஒளிபரப்பிய BTV என்ற அரசு நடத்தும் தொலைக்காட்சி நிலையத்தில் மாணவர்கள் தீ வைத்தனர்.

தொலைக்காட்சி நிலையக் கட்டடத்தின் முன் பகுதிக்கு தீ வைக்கப்பட்டது. அந்நேரத்தில் தொலைக்காட்சி ஊழியர்கள் உள்ளே இருந்தநிலையில், அனைவரும் பத்திரமாக வெளியேறினர்

தலைநகரான டாக்காவில் உள்ள டாக்கா பல்கலைகழகம் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவர்கள் கடந்த ஒரு வாரமாகவே இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டர்கள், கூட்டங்கள், பேரணிகள் நடத்தி வந்தனர்.