தொடர் பதக்கங்களை வெல்லும் இந்திய அணி!

01.09.2024 10:53:04

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஆகஸ்ட் 11ஆம் தேதியுடன் 17 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனை களமிறங்கினர். இந்த ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்திய அணி வென்றது.

   

இதனையடுத்து மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதில் இந்தியா சார்பில் 84 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில், நேற்று (30.08.2024) நடைபெற்ற 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா 2ஆவது முறையாகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். மேலும், மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வாலும் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இறுதிப்போட்டி இன்று (31-08-24) நடைபெற்றது. 8 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டியில், இந்திய வீராங்கனை ரூபினா 211.1 புள்ளிகள் பெற்று 3 வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.