
சஜித்துக்கு காலக்கெடு விதித்த ரணில்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) காலக்கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணைந்து கொழும்பு மாநகர சபையில் போட்டியிடுவதற்காக, ஐக்கிய மக்கள் சக்திக்கு (SJB) எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
முடிவை அறிவித்த தலைவர்
ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த மேற்கண்ட முடிவை, சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற அமைப்பாளர்களுக்கான நியமன நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) அறிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்க முடியும்.
அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில் யானை சின்னத்தில் தனித்து களமிறங்குவோம்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிந்தளவு முயற்சித்தார். இணக்கப்பாடு எட்டப்பட்டு யானை சின்னத்தில் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதே எமது இலக்காகும்." என தெரிவித்தார்.