சமுத்திரகனி படத்திற்கு பிரச்சினை

24.11.2021 13:14:35

 

இயக்குனர் ஏ.எல்.விஜய் கதை எழுதி, தயாரித்துள்ள படம் சித்திரை செவ்வானம். இதனை சண்டை இயக்குனர் சில்வா இயக்கி இருக்கிறார். இதில் சமுத்திரகனி, நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், ரீமா கல்லிங்கல் உள்பட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஓடிடி தளத்திற்கென்று தயாராகி உள்ள இந்த திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வருகிற டிசம்பர் 3ம் தேதி முதல் வெளிவர இருக்கிறது. இது தந்தைக்கும், மகளுக்கும் இடையிலான அன்பை சொல்லும் படம்.

இந்த படத்தின் டைட்டிலுக்கு தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த தலைப்பு எங்களிடம் உள்ளது என்று அத்திலி சினிமா என்ற நிறுவனம், இயக்குனர் சில்வாவுக்கும், தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.எல்.விஜய்க்கும், வெளியிடும் ஜீ5 நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சித்திரை செவ்வானம் தலைப்பை ஏற்கனவே அத்திலி சினிமா தனது பெயரில் 17.03.2020 அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ளது. சித்திரைச் செவ்வானம் படத்தின் அறிவிப்பை பார்த்த அத்திலி சினிமா நிறுவனம், படக்குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த பதிலும் வராத நிலையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.