திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.
|
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு மாதம் கூட இல்லாத சூழலில் இப்போது வோட்வைப் 'வோட் டிராக்கர்' கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் திமுக மற்றும் அதிமுக இடையே மிகக் கடுமையான போட்டி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுகவுக்கு லேசான முன்னிலை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வழக்கம் போல ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் சூழலில், மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
|
|
இந்த முறை தமிழ்நாட்டில் 4 பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகள் களத்தில் உள்ளன. வழக்கம் போல திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மிகப் பெரிய கூட்டணிகளை உருவாக்கி களத்தில் இறங்கியுள்ளன. மறுபுறம் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போலத் தனித்துப் போட்டியிடுகிறது. அதேபோல புதிதாக அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிடுகிறது. 4 முக்கிய அணிகள் களத்தில் இருந்தாலும் கூட திமுக மற்றும் அதிமுக இடையே தான் பிரதான போட்டி இருப்பதாகக் கருத்துக் கணிப்புகளில் தெரிய வருகிறது. இதற்கிடையே திங்கள் இரவு வோட்வைப் 'வோட் டிராக்கர்' நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த சர்வே இதற்கு முன்பு வெளியான ஐஏஎன்எஸ்-மேட்ரைஸ் (IANS-Matrize) முடிவுகளுக்கு ஒத்து இருக்கிறது. அதேநேரம் அக்னி நியூஸ் சர்வீசஸ் (Agni News Services) கருத்துக் கணிப்புகளில் இருந்து நேர் எதிராக இருக்கிறது.. வோட்வைப் 'வோட் டிராக்கர்' கருத்துக் கணிப்பு முடிவுகள் பிரத்தியேகமாக சிஎன்என்-நியூஸ்18 (CNN-News18) தளத்தில் வெளியானது. இதில் திமுக கூட்டணிக்கு இந்த முறை 104 முதல் 114 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் அதிமுக கூட்டணிக்கு 115 முதல் 125 இடங்கள் வரை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. விஜய் தலைமையிலான தவெக கட்சிக்கு 2 முதல் 8 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள சூழலில், 117 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். அதிமுக லேசாக முன்னணியில் இருந்தாலும் கூட போட்டி மிகக் கடுமையாக இருப்பதையே இது தெளிவாகக் காட்டுகிறது. இது நேற்று மார்ச் 30ம் தேதி வெளியான சர்வே ஆகும். முன்னதாக மார்ச் 23ம் தேதி வெளியான சர்வேயில் திமுக 113 முதல் 123 தொகுதிகள், அதிமுக 106- 116, தவெக 2 முதல் 8 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெளியான ஐஏஎன்எஸ்-மேட்ரைஸ் சர்வேயும் கிட்டத்தட்ட இதே முடிவுகளைக் குறிப்பிட்டு இருந்தது. அதிமுக கூட்டணி 39-40 சதவீத வாக்குகள் மற்றும் 114-127 இடங்களைப் பெறும் என்றும் திமுக கூட்டணி 37-38 சதவீத வாக்குகள் மற்றும் 104-114 இடங்களைப் பெறும் என்றும் ஐஏஎன்எஸ்-மேட்ரைஸ் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறியிருந்தது. அதாவது வெறும் 2-3 சதவீத வாக்குகள் வித்தியாசம், சிறிய மாற்றங்களும் கூட தேர்தல் முடிவுகளைக் கணிசமாக மாற்றக்கூடும் என்றே இந்த இரு சர்வே முடிவுகளும் காட்டியுள்ளது. இரண்டிலும் தெளிவான முன்னிலை யாருக்கும் இல்லை என்றாலும் அதிமுகவுக்கு சற்று முன்னிலை தரப்பட்டுள்ளது. இது களத்தில் கடுமையான போட்டி இருப்பதையே காட்டுகிறது. அதேநேரம் சென்னையைச் சேர்ந்த அக்னி நியூஸ் சர்வீசஸ் (Agni News Services) முன்னதாக வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பு இந்த இரண்டிலிருந்தும் முற்றிலும் மாறுபடுகிறது. அது திமுக கூட்டணிக்கு மிக பெரிய வெற்றி கிடைக்கும் என கூறியிருந்தது. திமுக கூட்டணிக்கு 44.9 சதவீத வாக்குகளுடன் 180 இடங்களிலும் அதிமுக கூட்டணிக்கு 38.5 சதவீத வாக்குகளுடன் 54 இடங்களிலும் வெல்லும் என அக்னி கருத்துக்கணிப்புகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. |