எக்ஸ்போ 2020 கண்காட்சியில் ரூ.450 கோடி செலவில் இந்திய அரங்கம் - துபாய்

14.02.2021 11:04:28

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில், ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்திய அரங்கத்தின் கட்டுமான பணிகள் மார்ச் 31-க்குள் நிறைவடையும் என இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

துபாயில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த உலக கண்காட்சி கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 192 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த கண்காட்சியானது வரும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் அடுத்த 2022-வது ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

 

இதற்காக துபாய் முதலீட்டு பூங்கா பகுதியில் 1,080 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு நாடுகளின் அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வளாகத்தில் ரூ.450 கோடி (25 கோடி திர்ஹாம்) செலவில் இந்திய அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 4 ஆயிரத்து 800 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்திய அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக 5 டி.எஸ். என்ற கருப்பொருளில் திறன் (டேலன்ட்), வர்த்தகம் (டிரேட்), பாரம்பரியம் (டிரடிசன்), சுற்றுலா (டூரிசம்) மற்றும் தொழில்நுட்பம் (டெக்னாலஜி) என 5 அம்சங்கள் நிறைந்த காட்சியமைப்புகள் இடம்பெற உள்ளது. இதில் அந்த கட்டிடத்தில் மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. தற்போது கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வேகமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தகவல் அளித்துள்ளது.

எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியில் அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய அரங்கம் முக்கிய இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.