இஸ்ரேலின் தாக்குதலில் கவிஞரின் மகள் குடும்பத்துடன் பலி

28.04.2024 09:07:26

இஸ்ரேலிய படையினர் காசாவின் மேற்கில் உள்ள வீடொன்றின் மீது  மேற்கொண்ட விமானதாக்குதலில்  பாலஸ்தீனத்தை சேர்ந்த பிரபல கவிஞரின் மகள் சைமா ரெவாட் அலரீர் கொல்லப்பட்டுள்ளார்.

நான்கு மாதங்களிற்கு முன்னர் தந்தை இதேபோன்ற தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் மகளும் கொல்லப்பட்டுள்ளார்.

 

 

இஸ்ரேல் குறிப்பிட்ட வீட்டை இலக்குவைத்து பலதடவை  மேற்கொண்ட தாக்குதலில்  அலரீரும் கணவரும் அவர்களின் இரண்டு வயது மகனும் கொல்லப்பட்டதாக  சிஎன்என் தெரிவித்துள்ளது.

அவர்கள் தஞ்சமடைந்திருந்த வீட்டை மூன்று ஏவுகணைகள் தாக்கின என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பரில் சுஜாயாவில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் தனது குடும்பத்தை சேர்ந்த பலருடன் கொல்லப்பட்ட கவிஞர் ரெபாட் அலரீரின் மகள் சைமா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலை தொடர்ந்து கவிஞரின் மகள் இடம்பெயர்ந்து  தங்கியிருந்த வீட்டின் மீதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் இடம்பெற்றதும் பொதுமக்கள் அந்த வீட்டை நோக்கி ஓடுவதையும் கொல்லப்பட்டவர்களின் உடல்களை சுற்றி காணப்படுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

வீடு முற்றாக அழிவடைந்ததையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன .

கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எகிப்தில் தற்போது இடம்பெயர்ந்து வாழும் கவிஞரும் காசாவை சேர்ந்த கவிஞருமான மொசாப் அபு டொஹா கவிஞர் ரெவாட்டின் மகள் அவரது குடும்பத்தினருடன் கொல்லப்பட்ட  தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தான் தாய்மை அடைந்துள்ளமை குறித்து சைமா சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார் தனது தந்தையுடன் பகிர்ந்துகொண்ட செய்தியின் ஸ்கிரீன்சொட்டை அவர் வெளியிட்டிருந்தார் என மொசாப் அபு டொஹா தெரிவித்திருந்தார்.

 உங்களிற்கு மிகவும் அழகான செய்தியுள்ளது நீங்கள் என் முன்னாலிருக்கும் போது இதனை சொல்லியிருந்தால் சிறப்பாகயிருந்திருக்கும் நான் உங்களுடைய முதல் பேரப்பிள்ளையை உங்களுக்கு வழங்குகின்றேன்  அப்பா உங்களுக்கு இது தெரியுமா நீங்கள் தாத்தாவாகிவீட்டீர்கள் என அவர் பதிவிட்டிருந்தார்.

இது உங்களின் பேரன் நீங்கள் அவனை தூக்கி சுமப்பது குறித்து நான் நீண்டநாள் கனவுகண்டுள்ளேன் ஆனால் அவனை பார்ப்பதற்கு முன்னர் மரணிப்பீர்கள் என ஒருபோதும் நினைக்கவில்லை என அவர் பதிவிட்டிருந்தார்.